அதிகபடியான தாமதக் கட்டணங்களை செலுத்த முடியாத காரணத்தால், இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,000 சொகுசு வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் தற்போது சுமார் 40,000 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மீள் ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக, குறிப்பாக துபாய் உள்ளிட்ட பகுதிகளுக்கான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், பல வாகனங்கள் நீண்டகாலமாக துறைமுகங்களில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீள் ஏற்றுமதிக்காக கொண்டுவரப்பட்ட வாகனங்களும் இதே தாமதக் கட்டண சிக்கலுக்கு முகங்கொடுத்து வருவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனம் ஒன்றை விடுவிக்க முயன்ற இறக்குமதியாளர் ஒருவர், அதற்காக சுமார் 5 கோடி ரூபாய் தடுத்துவைப்பு கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த வாகனம் சுமார் ஆறு ஆண்டுகளாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, வாகனத்தின் மொத்த செலவு சுமார் 7 கோடி ரூபாயாக அதிகரித்ததுடன், அதன் ஆரம்ப பெறுமதியை விட மூன்று மடங்குக்கும் அதிகமான தொகையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த இறக்குமதியாளர் வாகனத்தை மீட்கும் முயற்சியை கைவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேபோன்ற காரணங்களால் பல இறக்குமதியாளர்கள் தங்களது வாகனங்களை துறைமுகங்களில் இருந்து மீட்காமல் கைவிட்டு வருவதால், நூற்றுக்கணக்கான சொகுசு வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளதாகவும், தாமதக் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

