மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்பிரிவில், இலுப்பைக்கடவை, படகுத்துறைப் பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்குரிய கடலுணவுகளைக் கொள்வனவுசெய்யும் வாடிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது வலியுறுத்தலையடுத்து, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குறித்த வாடிகளை விடுவிப்பதுதொடர்பில் கடற்படையினருக்கு கடிதமொன்றை அனுப்பிவைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் – மாந்தை மேற்கு, பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
படகுத்துறைப் பகுதி மீனவர்களின் கோரிக்கைக்கு அமைவாக கடந்த 18.06.2026அன்று அப்பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், கடலுணவுக் கொள்வனவாளர்கள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது தமது கடலுணவுக் கொள்வனவனவு வாடிகளை
கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த வாடிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் மீனவர்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த வாடிகளின் விடுவிப்புத் தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனாலும் மீனவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்தொடர்ச்சியாக படகுத்துறையில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குறித்த வாடிகளை விடுவிப்பது தொடர்பான விடயத்தை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்ட நிகழ்ச்சிநிரலில் சேர்க்குமாறு கடந்த 2026.06.25ஆம் திகதியன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் மாந்தை மேற்கு பிரதேச செயலாளருக்கும் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
அந்தவகையில் குறித்த விடயம் கடந்த 03.07.2026அன்று இடம்பெற்ற மாந்தை மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குறித்த மீனவ வாடிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் வலியுறுத்தப்பட்டது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
குறிப்பாக படகுத்துறைப்பகுதியில் கடந்த 1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடலுணவுகளைக் கொள்வனவு செய்வதற்கென வாடிகள் அமைக்கப்பட்டு, கடலுணவுக் கொள்வனவுச் செயற்பாடுகள் மிகச்சிறப்பாக இடம்பெற்றுவந்துள்ளன.
இத்தகையசூழலில் கடந்த யுத்த சூழல் காரணமாக அந்தப்பகுதிகளிலிருந்த மக்கள் இடப்பெயர்வைச் சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதி மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது, குறித்த கடலுணவுக் கொள்வனவு வாடிடிகள் அமைந்திருந்த பகுதி கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததுடன், அந்த கடலுணவுக் கொள்வனவு வாடிகளையும் கடற்படையினர் பயன்படுத்திவந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கடலுணவு கொள்வனவு வாடிகளை விடுவிக்குமாறு, குறித்த வாடிகளின் உரிமையாளர்களால் தொடர்ச்சியாக உரியதரப்பினரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவந்தபோதும், அந்தவாடிகளை விடுவிப்பதற்கு இதுவரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் இவ்வாறு கடற்படையினால் கடலுணவுக் கொள்வனவு வாடிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் கடற்றொழிலாளர்களிடமிருந்து கடலுணவுகளைக் கொள்வனவுசெய்வதில் கடலுணவுக் கொள்வனவாளர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
எனவே கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அந்த கடலுணவுக் கொள்வனவு வாடிகளை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வலியுறுத்தினார்.
இந்நிலையில் குறித்த கடலுணவு கொள்வனவு வாடிகளை விடுவிப்பது தொடர்பில் கடற்படையினருக்கு கடிதமொன்றினை அனுப்பிவைப்பதென இதன்போது தீர்மானிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

