இலங்கையில் பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களை கையாள்வதற்கான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்’ (Protection of the State from Terrorism) என்ற புதிய சட்டமூலத்தை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமூலம், நாட்டிற்குள்ளும் நாட்டிற்கு வெளியேயும் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட செயல்கள் உள்ளிட்ட பயங்கரவாதச் செயல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களிலிருந்து இலங்கையின் தேசிய பாதுகாப்பையும் மக்களையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அத்துடன், இலங்கைக்கு வெளியே பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்வதற்கான ஆயத்த நடவடிக்கைகளில் இலங்கை மண்ணையோ அல்லது இலங்கை மக்களையோ பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதச் செயல்கள் அல்லது அது தொடர்பான குற்றங்களை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் காணுதல், கண்டறிதல், பிடித்தல், கைது செய்தல் மற்றும் தடுப்புக்காவலில் வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான நடைமுறைகளும் புதிய சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், சந்தேகநபர்களை விசாரணைக்கு உட்படுத்துதல், அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடருதல் மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்குதல் தொடர்பான சட்ட ஏற்பாடுகளையும் இந்தச் சட்டமூலம் கொண்டுள்ளது.
இதேவேளை, பொதுவாக ‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்’ (PTA) என அழைக்கப்படும், 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை இரத்து செய்வது இந்த புதிய சட்டமூலத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ள இந்த சட்டமூலம், தற்போது முன்மொழியப்பட்ட சட்டமாக பரிசீலிக்கப்படுவதற்காக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

