வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு எதிராக பலாலி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் மற்றும் சபை செயலாளர் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே தவிசாளர் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வழக்கில் ஆஜரான உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், “பாதையை விடுவிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தால் உங்களை கைது செய்வோம்” என நீதிமன்றத்திற்கு வெளியே தம்மை அச்சுறுத்தியதாக தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
தையிட்டியில் அமைந்துள்ள விகாரை காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பிரதேச சபைக்குச் சொந்தமான பவானி வீதியை மீட்கும் நடவடிக்கையை நிறுத்துமாறு பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
எனினும், குறித்த வழக்கை நேற்று நீதிமன்றம் தள்ளுபடி செய்து, பிரதேச சபை தவிசாளரையும் செயலாளரையும் வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்தது.
இந்த நிலையில், நீதிமன்றத்திற்கு வெளியே ஏற்பட்டதாகக் கூறப்படும் அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பாக, தவிசாளர் சோ. சுகிர்தன் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் எழுத்துமூல முறைப்பாடு அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வழக்குத் தீர்ப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தவிசாளர் சோ. சுகிர்தன், தையிட்டி விகாரை வளாகத்திற்குள் உள்ள பவானி வீதியை மிக விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுவிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாக தெரிவித்தார்.

