பாராளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் 09, 2026 அன்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் மட்டக்களப்பு ஏறாவூர் நகரசபையின் உப தவிசாளர் விவகாரம் குறித்து வெளியிட்ட கருத்து முற்றிலும் அடிப்படையற்றது. மற்றும் இது திட்டமிட்ட அடிப்படை ஆதாரங்கள் அற்ற போலியான குற்றச்சாட்டு என ஏறாவூர் நகர சபை உறுப்பினர் அஸ்மி வன்மையாகக் அதனைக் கண்டித்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது…
ஏறாவூர் நகர சபையில் உப தவிசாளர் விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏறாவூர் பிரதேச சபை உப தவிசாளர் ஞானசுந்தரம் கஜேந்திரன் மேற்பாவையாளர் ஐநுதீன் எனும் ஒரு அதிகாரியால் தாக்கப்பட்டதாக அவரின் பெயரை விழித்து கருத்து தெரிவித்திருந்தார்.
எனினும் இந்த தகவல் முற்றிலும் போலியாக சித்தரிக்கப்பட்ட ஒரு சம்பவமாகும், அத்துடன் ஏறாவூர் நகர சபையில் இரவு பகலாக தன்னை அர்ப்பணித்து பணி செய்யும் ஒரு ஊழியரை அற்ப அரசியல் விளம்பரம் மற்றும் பதவி இருப்பை தக்க வைக்கும் ஒரு சாராரின் தகவலை மாத்திரம் காகிதத்தில் எழுதி வைத்து வாசித்ததுடன் தனது கட்சியை சேர்ந்த ஒருவரின் அடிப்படை தகவல்களைகூட சரியாக தெரியாத நிலையில் அதனை பற்றி உயர் சபையில் பொறுப்பற்ற முறையில் பேசியது வியப்பளிக்கிறது.
மேலும் அவரின் பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டது போல இது ஏறாவூர் பிரதேச சபை விவகாரம் அல்ல மாறாக ‘ஏறாவூர் நகர சபை தொடர்பான விடயம் என்றும், அதனுடன் சம்பந்தப்பட்ட உப தவிசாளரின் முதற் பெயர் ஞானசுந்தரம் அல்ல ‘ஞானசேகரன் என்றும் சரியாக தெரியாத அளவு சொற்ப வினாடிகளில் பாராளுமன்றில் அவரால் கூறப்பட்ட விடயத்தில் பிரதானமான சபையின் பெயரிலும், உப தவிசாளரின் பெயரிலும் இருக்கும் தவறு போன்றே குறித்த விடயத்திலும் அடிப்படை ஆதாரம் அற்ற ஒரு விரும்பத்தகாத குழப்பநிலை யாரோ சிலரால் திட்டமிட்டு தோற்றுவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஒரு சமூகத்தின் மூத்த அரசியல் தலைமை இன்னும் ஒரு சமூகத்தை சேர்ந்த அதிகாரியின் பெயரினை விழித்து எந்த வித சரியான துல்லியமான விளக்கங்களை உரிய தரப்பினை பொறுப்புடன் அணுகி கேட்க முற்படாமல் உயரிய சபையில் பேசியமை ஏற்புடையது அல்ல.
மேலும் சமூக அமைதிக்கு, பிரதேச நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் என கருதி முன்கூட்டியே அவதானமாக முன்னெடுக்கப்பட வேண்டிய முன்மாதிரியை தவிர்த்து சரியான உண்மை நிலை குறித்து ஆராயாமல் நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் பொறுப்பு மிக்க சிலரே செயற்பட்டது ஆரோக்கியமான ஒரு விடயம் அல்ல.
இது தொடர்பாக காவல்துறையில் முறைப்பாடுகள் செய்யப்பட்டு விசாரணைகள் நடந்து கொண்டு இருக்கையில் இரவோடு இரவாக தாக்கப்பட்டதாக ஊடக மாநாடு மற்றும் வைத்தியசாலை அனுமதிப்பு என வேறு கோணத்துக்குத் திசை திருப்பப்பட்ட விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மருத்துவ அறிக்கை, பொலிஸ் அறிக்கை மற்றும் சம்பவ இடசாட்சியங்களின் அடிப்படையில் சபாநாயகர் இந்த விடயத்தை ஆராய்ந்து, இன வன்முறைக்குத் தூபம் இடும் வகையில் ஒரு உயர் சபையில் வெளியிடப்பட்ட இக்கருத்தைப் பாராளுமன்ற ஹன்சாட் அறிக்கையிலிருந்து நீக்க வேண்டும்.
உள்ளுராட்சி சபைகளில் போனஸ் ஆசன நியமனம் ஊடாக உறுப்புரிமை பெற்றவர்கள் உள்ளக கட்சி ரீதியாக தங்களது பதவிக் கால நிறைவு நெருங்கும் நிலையில், அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவும் தமது உறுப்புரிமையை தக்க வைப்பதற்காகவும் சபைகளுக்குள் திட்டமிட்ட குழப்பங்களைச் செய்வதாக சில அனுமான கருத்துக்கள் வெளிப்படும் நிலையில் அது ஏறாவூர் நகர சபையிலும் தாக்கம் செலுத்துகிறதா என்ற சந்தேகம் நிலவுவதால் பிரதேசத்தின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை வேண்டுமென்றே குழப்பி வீண் சர்ச்சைகளை உருவாக்கும் தரப்பினருக்கு எதிராக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், அதை தவிர்த்து உயர் மட்டங்களே பொறுப்பின்றி செயலாற்ற கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

