தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ள புதிய வரி, இலங்கையின் தேங்காய் ஏற்றுமதித் துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார்.
இந்த வரி காரணமாக இறக்குமதி செலவு கிலோ கிராமொன்றுக்கு 1,250 ரூபா முதல் 1,400 ரூபா வரை உயரக்கூடும் என அவர் தனது ‘X’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், மதிப்புக்கூட்டப்பட்ட ஏற்றுமதிக்காக பயன்படுத்தப்படும் உள்ளூர் தேங்காய்கள் உள்நாட்டு எண்ணெய் உற்பத்திக்குத் திருப்பப்படலாம் என்றும், அதன் விளைவாக பண்ணை விலைகள் குறையவும், ஏற்றுமதி ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி முழுமையாக தடைப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிர்பார்க்கப்படும் வரி வருவாய் கிடைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வரி 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளில் ஏற்றுமதி வருவாயையும் அரசாங்க வருவாயையும் குறைத்து, தொழில்துறையை கடுமையான அழுத்தத்திற்குள் தள்ளக்கூடும் என ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார்.
இந்த வரிக் கொள்கையின் தாக்கங்களை அரசாங்கம் கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

