மன்னாரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 5-இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர், வகுப்பாசிரியரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
குறித்த பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக விசேட வகுப்பு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வகுப்பாசிரியர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு மாணவி தவறான பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் வகுப்பாசிரியர், சக மாணவர்கள் முன்னிலையிலேயே மாணவியின் கன்னத்தில் பலமுறை அறைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலால் மாணவியின் கன்னத்தில் காயங்கள் மற்றும் இரத்தக் கட்டிகள் ஏற்பட்டதாகவும், இதையடுத்து பெற்றோர் உடனடியாக அவரை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன், அவரது உடல்நிலை மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். மாணவியைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆசிரியர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் அல்லது பாடசாலை நிர்வாகத்தின் தரப்பில் இதுவரை எந்த உத்தியோகபூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.

