சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட 19 சொகுசு ரக வாகனங்களை விசாரணைகளுக்காகச் சுங்கத்திடம் ( Customs Department) ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் தரவு கட்டமைப்பிற்குப் போலி தகவல்களை வழங்கிப் பதிவைப் பெற்றதுடன் சுங்கத்திற்கு உரிய வரிப் பணத்தைச் செலுத்தாது குறித்த வாகனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கையூட்டலுக்கு எதிரான விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மனுவை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
100 கோடி ரூபா
சுங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரி பெறுமதியைச் செலுத்தாது அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 19 வாகனங்கள் தொடர்பில் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றது.
அத்துடன் குறித்த வாகனங்களினூடாக அரசாங்கத்துக்குக் கிடைக்கப் பெறவேண்டிய 100 கோடி ரூபா வரி வருமானம் இல்லாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வாகனங்களை இலங்கை சுங்கத்தின் கீழ் பொறுப்பேற்று விசாரணைகளை நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்திடம் குறித்த மனுவின் ஊடாக கோரப்பட்டுள்ளது.
200 சொகுசு வாகனங்கள்
இந்த மனுவை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான், குறித்த வாகனங்களைப் பொறுப்பேற்று விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளார்.
இதேபோன்று 2015ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் மோசடியான முறையில் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தி நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட 200 சொகுசு வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் காரணமாக அரசாங்கத்திற்குக் கிடைக்காது போன வரி பெறுமதி 500 கோடி ரூபாவுக்கும் அதிகம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவ்வாறு கொண்டு வரப்பட்ட 200 வாகனங்களில் 16 வாகனங்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன் அவை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.