இலங்கை மத்திய வங்கி (CBSL) ஓரிரவு கொள்கை வீதத்தை (OPR) 8.00% ஆக பராமரிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (25) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களை கவனமாக பரிசீலித்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணங்கள்
தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு, பணவீக்கம் 5% என்ற இலக்கை நோக்கி நகர்வதை உறுதி செய்வதுடன், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் எனவும் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மின்சாரக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் மீண்டும் மீண்டும் குறைக்கப்பட்டதன் காரணமாக, பணவீக்கம் தற்போது எதிர்மறையாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பணவீக்க நிலைமைகள் மார்ச் 2025 முதல் படிப்படியாக தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேர்மறையான பணவீக்கம்
மேலும் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்கம் நேர்மறையாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்போது கிடைத்த தரவுகளின் அடிப்படையிலான முன்னறிவிப்புகள், ஆண்டு இறுதியில் பணவீக்கம் இலக்கு நிலைகளை எட்டும் என சுட்டிக்காட்டுகின்றன.
சமீபத்திய ஆண்டு மதிப்பீடுகள், உள்நாட்டு பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டில் இரண்டு ஆண்டு சுருக்கங்களுக்குப் பின்னர் வலுவான மீட்சியை பதிவு செய்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.