கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டியுள்ள பல தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு சிறு வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (24) அதிகாலை 2.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, நாளை (25) அதிகாலை 2.30 மணி வரை செல்லுபடியாகும்.
கிங் கங்கை படுகையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கணிசமான அளவில் பலத்த மழை பெய்துள்ளதுடன், தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது.
இதனடிப்படையில், தவலம, நாகொட, பத்தேகம மற்றும் வெலிவிட்டிய-திவிதுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட கிங் கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களில் சிறு வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, நில்வலா கங்கை படுகையில் நீர்மட்டம் தொடர்பான பகுப்பாய்வுகளின் அடிப்படையில், பஸ்கொட, கொட்டபொல, பிட்டபெத்தரை, அக்குரஸ்ஸ, அதுரலிய, மாலிம்பட, கம்புருப்பிட்டிய மற்றும் திககொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளிலும் சிறு வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், அந்தப் பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதுடன், பல பகுதிகளில் கடுமையான பனிமூட்டமும் நிலவி வருகிறது.
தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக, பிரதேசத்தில் உள்ள நீரோடைகள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் அதிகளவில் வெள்ளம் பாய்ந்து வருகிறது.
குறிப்பாக டயகம பகுதியில் ஆரம்பிக்கும் மகாவலி கங்கை, களனி கங்கை, கெசல்கமு ஓயா, ஹட்டன் ஓயா, போடைஸ் ஓயா, காட்மோர் ஓயா, சியத்தலகங்குல ஓயா, மரே ஓயா மற்றும் சாமிமலை ஓயா உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
அத்துடன், காட்மோர், மோகினி எல்ல, மரே மற்றும் லக்சபான நீர்வீழ்ச்சிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் குறித்த பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்க்குமாறு நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் துஷாரி தென்னகோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து வருகிறது.
மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவை அடைய இன்னும் 6 அடி மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கென்யோன் மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை அடைய இன்னும் 4 அடி 11 அங்குலம் உள்ள நிலையில், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை அடைய இன்னும் 14 அங்குலம் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லக்சபான நீர்மின் நிலைய நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு 2 அங்குலம் திறக்கப்பட்டுள்ளதுடன், விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் ஊடாகவும் 2 அங்குலம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையான 24 மணி நேரத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் 122 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நுவரெலியா மாவட்ட காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கனமழையால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பண்ணையாளர்கள், விவசாயிகள் மற்றும் பாடசாலை மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும், நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், மலையகப் பகுதிகளில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு ஹட்டன் வலய பொலிஸ் தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, மத்திய மலைநாட்டில் நிலவும் கனமழை மற்றும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக மலைச்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.

