வினைத்திறனான சுற்றுலா வழிகாட்டலை உறுதிப்படுத்தும்வகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் சுற்றுலா அலுவலகத்தை நிறுவுவதுடன், சுற்றுலா அபிவிருத்திக்கான பிரத்தியேக உத்தியோகத்தர்களையும் வழங்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுற்றுலா பிரதி அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பில் எதிர்காலத்தில் உரியநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க பதிலளித்துள்ளார். நாடாளுமன்றில் 22.07.2026இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இது தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத்தெரிவிக்கையில்,
தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைதருகின்றனர். ஆனால் தற்போதும் சுற்றுலாத்துறையில் முல்லைத்தீவு மாவட்டம் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு, தற்போதைய அரசாங்கம் சில விடயங்களுக்கு 2027ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டைச் செய்வதற்குத் திட்டமிட்டிருப்பதை அறியமுடிகின்றது.
கட்டட நிர்மானங்களுக்கு தற்போது அரசு மெல்ல மெல்ல அக்கறையைக் காட்டினாலும், சுற்றுலா வழிகாட்டலைச் சிறந்த முறையில் செயற்படுத்த தேவையான ஆளணி மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு என்பன முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பலவீனமான நிலையிலேயே காணப்படுகின்றது.
சுற்றுலா தொடர்பான அபிவிருத்திச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கும், போதியளவு வழிகாட்டல்களை மேற்கொள்வதற்கும் மாவட்டத்திற்குரிய சுற்றுலா அலுவலகம் முக்கியதேவையாகும். அதேபோல் சுற்றுலாத்துறைக்கான அளணியும் தேவைப்படுகின்றது.
எனவே நிர்மாணங்களுக்கு மேலதிகமாக வினைத்திறனான சுற்றுலா வழிகாட்டலை உறுதிப்படுத்தும்வகையில், மாவட்டத்திற்குரிய சுற்றுலா அலுவலகம் மற்றும் சுற்றுலா அபிவிருத்திக்கான பிரத்தியேக உத்தியோகத்தர்கள் என்பவற்றை முல்லைத்தீவு மாவட்டத்திற்குவழங்கும் ஏதுநிலை தங்கள் அமைச்சின்கீழ் காணப்படுகின்றதா? என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது கேள்வி எழுப்பினார்.
இதன்போது சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க பதிலளிக்கையில்,
வடக்குமாகாணம் சுற்றுலாத்துறைக்கு சாத்தியமான இடமாகக் காணப்படுகின்றது. உலகவங்கியின் நிதி உதவியில் நாம் ஒரு திட்டத்தினை ஆரம்பிக்கவிருக்கின்றோம்.
சுற்றுலா மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் முல்லைத்தீவு பகுதிகளில் ஆரம்பக்கட்டத்திலிருக்கின்றது.இந்தப் பகுதிகளில் தங்குமிட வசதிகள் மிகவும் தரம் குறைந்தவையாகக் காணப்படுகின்றன.
இங்கு சுற்றுலாத்துறைக்குரிய போதியளவு வசதி வாய்புக்கள் இல்லாத நிலையே காணப்படுகின்றது.வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கும், அனைத்து வசதிவாய்ப்புக்கும் செய்துகொடுக்கப்படவேண்டும். ஆகவே இவ்வாறான விடயங்களில் நாம் அபிவிருத்திகளைச் செய்யவேண்டியிருக்கின்றது.
எம்மால் சுற்றுலா வலயங்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இனங்காணப்பட்ட இடங்களை அபிவிருத்திசெய்யத் திட்டமிட்டுள்ளோம். அந்தவகையில் சுற்றுலா அதிகாரசபையினூடாக அந்த அபிவருத்திகளைச் செய்யவிருக்கின்றோம்.
எதிர்காலத்தில் மாவட்டத்திற்குரிய சுற்றுலா அலுவலகம் மற்றும் சுற்றுலா அபிவிருத்திக்கான ஆளணித் தொகுதியினர் இதற்குப் பொறுப்பாக நியபிக்கப்படுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் – என்றார்.

