பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (31) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்காக பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
குறித்த விசாரணைக்கான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் குறிப்பிட்ட தினத்தில் ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை.
இதனைத் தொடர்ந்து, ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தது. அப்போது அவர் வீட்டில் இல்லாத நிலையில், தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு தனது சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கமைய, இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக ரவி கருணாநாயக்க அறிவித்திருந்த நிலையில், தற்போது அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

