வாகன இறக்குமதிக்கு தொடர்ந்தும் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் சந்தையில் கடுமையான சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் வாகனத் தேவை தற்போது பெரும்பாலும் பூர்த்தியாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வாகன இறக்குமதியால் அரசுக்கு கிடைக்கும் வரி வருமானம் குறையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதிக்குப் பின்னர் வாகன இறக்குமதி தொடர்பான தற்போதைய கொள்கையை நீட்டிப்பதா அல்லது மாற்றுவதா என்பது குறித்து அரசாங்கம் எடுக்கும் தீர்மானம் சந்தையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) உடன்படிக்கைகளின் காரணமாக புதிய கூடுதல் கட்டணங்களை விதிக்க முடியாத நிலை காணப்பட்டாலும், தற்போது நடைமுறையில் உள்ள கூடுதல் கட்டணங்கள் நீக்கப்பட்டால் சந்தையில் மீண்டும் மாற்றங்களும் அதிர்வுகளும் ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த காலத்தில் காணப்பட்ட வாகனங்களுக்கான அதிக தேவை தற்போது குறைந்துள்ளதுடன், இறக்குமதியாளர்கள் தேவையான அளவு வாகனங்களை ஏற்கனவே இறக்குமதி செய்திருப்பதால் புதிய வாகனப் பதிவுகளும் படிப்படியாகக் குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, வாகன இறக்குமதி வரி வருமானம் கடந்த ஆண்டின் அளவை எட்டுவது சாத்தியமில்லை என்றும் அவர் மதிப்பிட்டுள்ளார்.
தற்போது வாகனங்களுக்கு 150 முதல் 200 சதவீதம் வரையிலான அதிக இறக்குமதி வரி விதிக்கப்படுவது நியாயமற்றது எனக் கூறிய தனநாத் பெர்னாண்டோ, ஒரே தரப்பினரிடம் தொடர்ந்து அதிக வரிகளை அறவிடுவதற்குப் பதிலாக அரச செலவினங்களை திறம்பட முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்பு சீர்திருத்தங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசின் வரி வருவாயை அதிகரிக்க முடியும் என்றும், அதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான வலுவான சமிக்ஞையை சந்தைக்கு வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

