மட்டக்களப்பில் மட்டும் நாம் 100இற்கும் அதிகமான சுற்றுலா ஹோட்டல்களை நிர்மாணிக்கலாம். அதேபோல் விவசாயத்தை நவீனமயப்படுத்துவதன் ஊடாகவும் வௌிநாட்டு வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு”கோல்டன் ரிவர்” ஹோட்டலில் நேற்று (22) நடைபெற்ற இளையோர் அணி சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டார்.
ஏற்றுமதி பொருளாதாரம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
திறந்த உலகில் எமது சந்தைகளை வலுவூட்ட வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. நமது நாட்டின் உற்பத்திளை ஏற்றுமதி செய்வது குறித்து இதுவரை கவனம் செலுத்தவில்லை. நாம் ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும். ஏற்றுமதிசார் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.
நெருக்கடி காலத்தில் எம்மிடம் போதிய வௌிநாட்டு கையிருப்பும் இருக்கவில்லை. எரிபொருள் உள்ளிட்டவைகளை இறக்குமதி செய்யவும் வௌிநாட்டு வருவாய் தேவைப்படும். அவ்வாறான தேவைகளுக்காக பெற்றுக்கொண்ட கடனை எம்மால் மீள செலுத்த முடியாமல் போனது.
அதனால் எம்மிடத்திலிருக்கும் வளங்களைப் பயன்படுத்தி அதனூடாக ஏற்றுமதியை பலப்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும்.
பயிற்றுவிக்கப்பட்ட சிரமப் படையும் எமது வளங்களின் ஒரு அங்கமாகும்.
அடுத்தது சுற்றுலாத்துறை. மட்டக்களப்பில் மட்டும் நாம் 100இற்கும் அதிகமான சுற்றுலா ஹோட்டல்களை நிர்மாணிக்கலாம். அதேபோல் விவசாயத்தை நவீனமயப்படுத்துவதன் ஊடாகவும் வௌிநாட்டு வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும்.
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டாலும், ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கி நகராவிட்டால் அடுத்த 15 – 20 வருடங்களுக்குள் இதே பிரச்சினைக்கு மீண்டும் முகம்கொடுப்போம்.
அதற்கான சிறந்த வழியாக விவசாயம், சுற்றுலா துறைகளை மேம்படுத்தி ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நகர்வதை இலக்காகக் கொள்ள வேண்டும். அதற்காகவே பொருளாதார மாற்றத்துக்கான சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.