இலங்கையில் அடுத்த வரும் சில நாட்களில் 19 கொலைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த சதி நடவடிக்கை இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள பாதாள உலகக் கும்பல்களால் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இரகசிய அறிக்கை
இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் இரகசிய அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, பாதாள உலகக் குழுக்களிடையே நடத்தப்படும் இந்த கொலை அலைகளை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மேற்கு தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அண்மையில் அறிவித்துள்ளார்.
இவ்வாறு இனங்காணப்பட்ட பாதாள உலக கொலைக் கும்பல்கள் தமக்கு இலக்கானவர்கள் மற்றும் தாங்கள் கட்டுப்படுத்தும் வெளிநாட்டு பாதாள உலகக் குழுக்கள் தொடர்பான இரகசிய புலனாய்வு அறிக்கையை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தப் படுகொலை இலக்குகள் தொடர்பிலும் பாதாள உலகக் குழு தொடர்பிலும் ஊடகங்களுக்கு தகவல் வழங்கிய அமைப்பின் தலைவர் ஒருவரை பழிவாங்கும் வகையில் அவரது சகோதரரைக் கொலை செய்ய முயற்சித்தமையும் தெரியவந்துள்ளது.
கஞ்சிபானி இம்ரான், குடுலால், அஹுங்கல்லே லொகு பெட்டி, அஹுங்கல்லே பொடி பெட்டி, கொஸ்கொட சுஜீ, கரந்தெனிய சுத்தா, மட்டக்குளியே ரொஷான், ரத்கம விதுர, பிரான்ஸின் ஆனந்த, படோவிட்ட அசங்க, கணேமுல்ல சஞ்சீவ உள்ளிட்ட பாதாள உலகக் குழுக்களின் போதைப்பொருள் மற்றும் அதிகாரம் தொடர்பான கருத்து மோதல்கள் காரணமாகவே இந்த கொலைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.