யாழ்ப்பாணம் (Jaffna) – செம்மணியில் எலும்புக் கூடுகளாக மீட்கப்படும் உறவுகளுக்கு நீதி வேண்டி அணையா
தீபம் ஏற்றப்படவுள்ளதாக மக்கள் செயல் அமைப்பு தெரிவித்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (21) ஊடக சந்திப்பை முன்னெடுத்த குறித்த அமைப்பின் ஏற்பாட்டுக்குழுவின் பிரதிநிதிகள் இவ்வாறு குறிப்பிட்டனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ”தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும்
அதிகரித்து செல்கின்றதே தவிர தீர்வுகள் எதுவும் கிடையாத போசுபொருளாகவே அது
நீடித்துச்செல்கின்றது.
”அணையா தீபம்” போராட்டம்
அவ்வாறான நிலை இனியும் தொடரக் கூடாது, தமிழ் மக்கள் இழந்தவற்றையும் அதற்கான
தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் பொறிமுறையை நோக்கிய வகையில் மக்கள்
மயப்படுத்தப்பட்ட வகையில் ”அணையா தீபம்” போராட்டம் யாழ் செம்மணியில்
முன்னெடுக்கப்படவுள்ளது.

குறிப்பாக செம்மணி மண்ணில் புதையுண்டுபோன உறவுகளுக்கு, நீதி வேண்டிய
போராட்டமாக ”அணையா தீபம்” என்ற பெயரில் 23,24,25 ஆகிய 3 நாட்களுக்கு அணையா தீபம் ஏற்றி அகிம்சை
வழியில் உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.
குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இழந்த உறவுகளுக்கான நீதியை தேடி
சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இப்போராட்டம்
முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ் வரவுள்ள ஐக்கிய நாடுகள் உயர் அதிகாரி
நாளை மறுதினம் (23) திங்கட்கிழமை 10 மணிக்கு ஆரம்பமாகும் இப்போராட்டம் இரவு பகலாக
மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.

யாழ் வருகைதரவுள்ள ஐக்கிய நாடுகள் உயர் அதிகாரியின் பார்வைக்கு பிரச்சினையின் ஆழத்தை
வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு தமிழ் மக்கள், பொது
அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்க
வேண்டும்” என தெரிவித்திருந்தனர்.


