நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குதல் மற்றும் பாதுகாப்பு முகாம்களை நடத்தி வரும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக கிராம உத்தியோகத்தர்கள் மீது அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நிவாரணம் வழங்குவதில் தொடர்ந்து கிராம உத்தியோகத்தர்களுக்கு அழுத்தம் கொடுப்பார்களாயின், விருப்பம் இன்றியேனும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை உருவாகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க,
நிவாரண வழங்கும் செயற்பாடு
“தற்போதைய அரசாங்கம் நிவாரணம் வழங்குதலையும், நிவாரண வழங்கும் செயற்பாடுகளையும் துரிதப்படுத்தியுள்ளது.

எனினும் உரிய தரப்பினரிடம் நிவாரணங்களை கொண்டு சேர்க்கும் செயற்பாட்டில் கடந்த காலங்களை விட இம்முறை அரசியல் தலையீடுகளால் கிராம உத்தியோகத்தர்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
நாடு முழுவதும் அவ்வாறு அரசியல் அழுத்தங்களை தாம் எதிர்கொண்டதாக கிராம உத்தியோகத்தர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நாடு பேரழிவை சந்தித்துள்ள இந்த நேரத்தில் தொழிற்சங்க நடவடிக்கை மீது கவனம் செலுத்த நாம் தயாராக இல்லை.
எனினும் நிவாரணம் வழங்குவதில் தொடர்ந்து கிராம உத்தியோகத்தர்களுக்கு அழுத்தம் கொடுப்பார்களாயின், விருப்பம் இன்றியேனும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை உருவாகலாம்.
பேரழிவு காலங்களில் அரசாங்கம் வேறு விடயங்களில் ஈடுபட வேண்டாம்.
பிரஜா சக்தி
“பிரஜா சக்தி” என்ற இந்த புதிய திட்டத்தை பேரழிவு நிவாரணத்திற்காக பயன்படுத்த வேண்டாம்.
பல மாவட்டங்களில், பிரஜா சக்தி அதிகாரிகளும், அரசியல் அதிகாரிகளும் இந்த நிவாரண உதவிகளை வழங்குவதற்கு கையொப்பமிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் பதுளை மாவட்ட செயலாளரே கடிதம் அனுப்பியுள்ளார்.
குருநாகல் மாவட்ட செயலாளர் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஏனைய பிரதேச செயலகங்களில் பிரஜா சக்தி அதிகாரிகளிடமிருந்தும், பிரஜா சக்தியின் அரசியல் அதிகாரிகளிடமிருந்தும் கையொப்பங்களைப் பெற வேண்டியுள்ளது.
25,000 ரூபா வழங்கும் விடயத்தை அரசியல் அதிகாரிகளிடம் சொல்லி பரிந்துரைகளைப் பெற முயன்றால், கிராம உத்தியோகத்தர் கடமைக்கு இடையூறு ஏற்படும். இதுவரை கிராம உத்தியோகத்தர் சுயமாகவே செயற்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

