நாட்டு மக்கள் மீண்டும் மருந்து, உரம், எரிவாயு, எரிபொருள் வரிசைகளில் நிற்க நேரிடும் என்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எச்சரித்துள்ளார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியும் என்ற திருப்தி மக்களுக்கு இருக்குமாயின் அந்த வேலைத்திட்டத்துடன் முன்னேறிச் செல்ல முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு(Colombo) – பத்தரமுல்லை வோடர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று (11) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் தவறுகளை செய்ய வேண்டாம்
மேலும் கருத்து தெரிவித்த அதிபர், தேர்தல்களின் போது நபர்களை பார்த்து தீர்மானம் எடுக்கும் கடந்த கால அரசியல் தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம், நாட்டின் பொருளாதார மறுசீரமைப்புக்காக சமர்பிக்கப்பட்டிருக்கும் சட்டமூலத்தை நிறைவேற்ற ஆதரவளிக்க வேண்டும், அதற்கு மாறாக நாட்டின் முன்னேற்றுத்துக்கான வேறு திட்டங்களை வைத்துள்ளவர்கள் அதனை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும்.
இன்று அரசியல்வாதிகள் பலதரப்பட்ட வாக்குறுதிகளை வழங்குகின்றனர். அவர்களில் எவரும் நாட்டின் முன்னேற்றுத்துக்கான கொள்கைகளை முன்மொழியவில்லை.
எதிர்க்கட்சித் தலைவரும் அனுரகுமார திசாநாயக்கவும் (Anura Kumara Dissanayaka) எந்த இடத்தில் விவாதம் செய்வது என்பது குறித்தே ஒரு மாத காலமாக விவாதித்தனர்.
இறுதியாக ஒரு விவாதத்திற்கு வரவும் இல்லை. இவர்களில் ஒருவரிடத்திலும் நாட்டின் முன்னேற்றத்திற்கான கொள்கைகள் இல்லை.
துரித அபிவிருத்தி
உங்கள் எதிர்காலத்தை பொறுப்பேற்க அவர்கள் தயாராக இல்லாத பட்சத்தில் உங்களின் எதிர்கால முன்னேற்றத்தை நீங்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
அதற்கான வேலைத்திட்டம் மிக அவசியமானது. உங்கள் அறிவு மேம்பாட்டிற்காக ஏனைய அதிகாரிகள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளை சந்திக்கவும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். புதிய திட்டங்களை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும்.
பழைய முறைமைகளில் சிக்கிக் கிடப்பதை விடுத்து துரித அபிவிருத்தியை நோக்கி நகர்வதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என்று அதிபர் தெரிவித்துள்ளார்.