யாழ் (Jaffna) மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு இறங்குதுறை கேட்டு இதுவரை யாரும் கோரிக்கை விடுக்கவில்லை. என்றாலும் எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்த நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (19) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பாக முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் மீதான எதிர்க்கட்சித் தலைவரின் அக்கறைக்கு நன்றி தெரிவிக்கிறேன். அந்த கடற்றொழிலாளர்கள் இறங்குதுறையொன்று கேட்டிருப்பதாக உங்களின் கேள்வி அமைந்திருந்தது.
அது தொடர்பான கோரிக்கை இதுவரையில் என்னிடம் விடுக்கப்படவில்லை.
தனிநபர் பிரேரணை
வான் தோன்றுவது தொடர்பிலேயே கேட்டிருந்தார்கள். இம்முறை வட மாகாணத்துக்கு அதிபர் 500 மில்லியனை ஒதுக்கியுள்ளார். அந்த வகையில் அந்த வான் தோன்றும் வேலைகள் அடுத்த மாதமளவில் ஆரம்பிக்கப்படும்.
இதேவேளை இழுவை மடிவலை தொடர்பாக 2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் தனிநபர் பிரேரணையாக கொண்டு வரப்பட்டு அதனை பின்னர் கடற்றொழில் அமைச்சு பொறுப்பேற்றுக் கொண்டது.
மென் இழுவை
கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையால் நாரா (NARA) நிறுவனத்தின் ஆய்வுக்கு பின்னர் எந்தெந்த பகுதிகளில் செய்யலாம் என்று கூறி தீர்மானிக்கப்பட்டதுடன் அந்த இடங்களில் மென் இழுவைவலைக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எல்லா இடங்களிலும் வழங்கப்படவில்லை. இருந்தும் உங்களின் கேள்வியை கருத்திலெடுத்து மீளாய்வு செய்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.