Courtesy: Sivaa Mayuri
இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பரவலாக்கப்பட்ட நிதி (Decentralised fund) ஒதுக்கீடு என்பது தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடயம் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (
Mahinda Yapa Abeywardena ) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல உட்பட பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பரவலாக்கப்பட்ட நிதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒதுக்கீடு குறித்து அண்மைக்காலமாக தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
பொருளாதார ஸ்திரப்படுத்தல்
இந்தநிலையில் குறித்த நிதி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த சபாநாயகர் தலையிடுவாரா என கேள்விக்கு பதிலளித்துள்ள மகிந்த யாப்பா அபேவர்த்தன, இந்த விடயத்தில் தமக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ தொடர்பில்லை என்று தெளிவுபடுத்தினார்.
இந்த நிதி,பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சகத்தால் கையாளப்படும் நிதியாகும்.
எனவே இது குறித்து தாம் சம்பந்தப்பட்ட அமைச்சிடம் மட்டுமே கேட்க முடியும் என்று சபநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் குறித்த நிதி விடயத்தில், தனிப்பட்ட ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் மாவட்ட மட்டத்தில் சம்பந்தப்பட்ட அபிவிருத்திக் குழுக்களிடமிருந்து கிடைத்த பிரேரணைகளுக்கு அமையவே, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்களை செயல்படுத்தும் பணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதேவேளை வரவு செலவுத்திட்ட பரவலாக்கப்பட்ட நிதியில் மொத்தம் 19 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 1,206 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.