சவூதி அரேபியாவில் (Saudi Arabia) அதிகரித்த வெப்ப அலை காரணமாக ஹஜ் யாத்திரை மேற்கொண்ட சுமார் 1300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இவ்வாறாக உயிரிழந்தவர்களில் 83 வீதமானோர் பதிவு செய்யாது ஹஜ் யாத்திரையை மேற்கொண்டுள்ளதாக சவூதி அரேபிய சுகாதாரத்துறை அமைச்சர் பகத் அல் ஜலாஜெல் (Fahd Al-Jalajel) தெரிவித்துள்ளார்.
அத்துடன், போதுமான தங்குமிடம் வசதியின்றி நேரடி சூரிய ஒளியின் கீழ் நீண்ட தூரம் நடந்துள்ளமை குறித்த தரப்பினரின் மரணத்துக்கு காரணமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகரித்த வெப்ப அலை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “வெப்ப அலையின் ஆபத்துகளில் இருந்து யாத்ரீகர்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள முடியும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அனுமதி இல்லாமல் மெக்காவுக்கு (Mecca) வந்த 1,40,000 யாத்ரீகர்கள் உள்பட 5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இந்த ஆண்டு 1.8 மில்லியன் யாத்ரீகர்கள் ஹஜ் யாத்திரையில் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டைப் போலவே, 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.