நாட்டின் சுற்றாடல் துறைசார்ந்த பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் தேவைகளுக்கும் தீர்வு காணும் வகையில் எனக்கு தரப்பட்டுள்ள இந்த பொறுப்பை செவ்வனே செய்வேன் என வர்த்தக மற்றும் சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் (S. Viyalendiran) தெரிவித்துள்ளார்.
இன்று (25.06.2024) அவரது அமைச்சு அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றியு அவர்,
“எனக்கு கடந்த காலத்தில் தரப்பட்ட அமைச்சு சார் பொறுப்புக்களை முடிந்தளவு நான் சிறப்பாக செய்திருக்கின்றேன்.
அதற்கு அனைத்து உத்தியோகத்தினரினதும் ஒத்துழைப்புக்களும் பங்களிப்புக்களும் எனக்கு சிறப்பாக கிடைத்தன.
எனவே, அவற்றை நாங்கள் எதிர்காலத்திலும் சிறப்பாக செய்வோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
விடத்தல் தீவு பிரச்சினை
அதேவேளை, வடக்கு – கிழக்கை பொறுத்த வரையில் சுற்றாடல் சார் பிரச்சினைகள் இருக்கின்றன.
எனவே, ஜனாதிபதி இந்த விடயங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறு கூறியிருக்கின்றார்.
அதனடிப்படையில், வடக்கு – கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கின்ற சுற்றாடல் சார் பிரச்சினைகளை ஆராய்ந்து மக்களினுடைய நலனடிப்டையில் தீர்க்க நடவடிக்கை எடுக்க செயற்படுவோம்” என உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, மன்னார் விடத்தல் தீவு பிரச்சினை குறித்து செய்தியாளர் ஒருவர் வினவிய போது பதிலளித்த அவர்,
” நாட்டில் உள்ள வளங்கள் நாட்டுக்கு பயன்பட வேண்டும். ஆனால், அதற்காக மனித வளத்தையும் பௌதீக வளத்தையும் அழித்து ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது ஒரு தனிப்பட்ட நிறுவனமோ செயற்படும் போது அது, குறித்த வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமானால், நிச்சயமாக அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆகவே, நாட்டின் மனித – பௌதீக வளங்கள் பாதிக்கப்படாமல் பதுகாக்கப்பட வேண்டும்.
மேலும், குறித்த விடயம் தொடர்பில் நாங்கள் முதலில் ஆராய வேண்டும். பின்னர் அதில் அமைச்சின் பங்கேற்புகளை வழங்கி பாதிப்பு ஏற்படத வகையில் தீர்மானம் எடுக்கப்படும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.