மாத்தளை மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிடச் சென்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன், இளைஞர் ஒருவர் பகிரங்கமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள முகாமில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் சத்தமிட்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
அந்த பகுதியில் பாதுகாப்பான காணிகளை அடையாளம் காண்பதில் முறைகேடுகள் நடப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
“தினேஷ் அய்யா” எனப்படும் ஒரு நபர் தமக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே நல்ல காணிகளை தேர்வு செய்து தருவதாகவும், தங்களுக்கு வேண்டியவர்கள் அதிகாரத்தில் இருப்பதாகக் கூறி அவர் பாரபட்சம் காட்டுவதாகவும் அந்த இளைஞர் ஆவேசமாகக் கூறினார்.
வாக்குவாதம் முற்றிய நிலை
வாக்குவாதம் முற்றிய நிலையில், நாமல் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் அந்த இளைஞரை அங்கிருந்து அகற்ற முயன்றனர். ஆனால், அவர்களைத் தடுத்த நாமல் ராஜபக்ச அந்த இளைஞரைத் தனியாக அழைத்து அவரிடம் அமைதியாகப் பேசினார்.

“உங்களது அரசியலை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள், எனது அரசியலை நான் பார்த்துக் கொள்கிறேன்.
ஆனால், இந்த மக்களை மாதக்கணக்கில் முகாம்களில் வைத்திருக்க முடியாது. முதலில் அவர்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைத் தேட வேண்டும்,” என்று நாமல் அந்த இளைஞரிடம் கூறினார்.
மேலும், அரசாங்கம் அல்லது ஜனாதிபதி மீது ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை நாடாளுமன்றத்தில் பேசலாம் என்றும், இது மக்கள் துயரத்தில் இருக்கும் வேளையில் வாதிடுவதற்கான இடமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாமலின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட அந்த இளைஞர், பின்னர் தனது ஆவேசத்தைக் குறைத்துக் கொண்டார்.
நாமலின் கருத்துக்களுக்கு இணங்கிய அவர், இறுதியில் நாமல் ராஜபக்சவைக் கட்டித்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார். இதனால் சிறிது நேரம் பதற்றமாக இருந்த அந்த இடம், ஒரு சுமுகமான சூழலுடன் முடிவுக்கு வந்தது.

