தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான
இரா.சம்பந்தனின் (R. Sampanthan) இழப்பானது மிகுந்த வேதனையையும்
அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள்
முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான வி. மணிவண்ணன் (V. Manivannan) தெரிவித்துள்ளார்.
மூத்த தமிழ் அரசியல்வாதியான சம்பந்தனின் மறைவிற்கு இன்று (1) வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாததும் மறுக்க
முடியாததுமான மிகப்பெரும் அரசியல் தலைவராக இராஜவரோதயம் சம்பந்தன் ஐயா
விளங்கினார்.
ஈழ தமிழர்களுக்கு பேரிழப்பு
தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும்
என்ற விடயத்தில், தனது இறுதி மூச்சு நிற்கும் வரை உறுதியாக இருந்த ஒருவர்.
அவரது இழப்பானது தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே
காணப்படுகிறது.
இலங்கையிலிருந்து பிரித்தானியர் வெளியேறிய பின்னர் பல சவால்களுக்கு
மத்தியிலும், ஈழத் தமிழர்களின் உரிமைக்கான விடுதலைப் போராட்ட காலம் மற்றும்
ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னரான காலத்திலும் ஈழத் தமிழ்
மக்களுக்காக ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அவரின்
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என
குறிப்பிடப்பட்டுள்ளது.