Courtesy: H A Roshan
திருக்கோணேச்சர ஆலயத்தின் புனித தன்மையை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று (01) திருகோணமலை, திருக்கோணேச்சர ஆலய பரிபாலன சபைக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை திருக்கோணேச்சர ஆலய பரிபாலன சபையினர் ,தொண்டர்கள் மற்றும் சைவ அடியார்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆலயத்தின் புனிதத்தை பாதுகாக்கும் நடவடிக்கை
திருக்கோணேச்சர ஆலய அண்மித்த கடைத் தொகுதியில் கசிப்பு விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதாகியதையடுத்து அதனை சீல் வைக்கச் சென்ற திருகோணமலை நகர சபை ஊழியர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதனை கண்டித்தும் புனித தன்மையை பாதுகாக்க அரச துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் இதன் போது தெரிவித்துள்ளனர்.
இந்த புனித ஆலய சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் சட்ட ரீதியாக கடையை சீல் வைக்க சென்றவரை தாக்கியதும் கண்டிக்கத்தக்கது எனவும் இதன் போது தென்காயிலை ஆதினம் அகத்தியர் அடிகளார் கூறியுள்ளார்.
அத்துடன், கிழக்கு மாகாண ஆளுனருக்கு இது தொடர்பான மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவில், இந்த புனித தளத்தில் சில வருடங்களுக்கு முன்னர் தற்காலிக கடைகள் அமைத்து வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் பல இடர்பாடுகளை சந்திக்க நேரிடுவதாக ஆலய பரிபாலன சபை மூலமாக உரிய தரப்புக்களுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் எடுத்துக் கூறப்பட்டது.
இது தொடர்பில் (10.06.2019) அன்று மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது ஆலயம் ஊடாக செல்லும் கடைகள் அகற்றப்பட்டு வேறொரு இடத்தில் அமைத்துக் கொடுப்பது தொடர்பான விடயத்தை அனைவரும் ஏகமானதாக ஏற்றுக் கொண்டனர்.
சட்டவிரோத செயற்பாடு
இதன் தொடர்ச்சியாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர்கள் (11.10.2022) அன்று குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடி இணக்கம் தெரிவிக்கப்பட்டும் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில், அண்மையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் சட்டவிரோத செயற்பாடு ஒன்று இடம்பெற்றது.
எனவே, ஆலயத்தின் புனிதத்தை பாதுகாக்க இது போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்தால் வியாபாரிகளின் பொருளாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்படாது.
ஆகவே தற்போது கடைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து மாற்று இடத்தை வழங்கி வியாபாரத்தை நடாத்த நடவடிக்கை எடுக்குமாறு குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த போராட்டத்தில் ஆலய பரிபாலன சபை தலைவர் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.