தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தன் வழியில் சென்று தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்(Velusami Radhakrishnan) தெரிவித்துள்ளார்.
சம்பந்தனின்(R. Sampanthan) மறைவுக்கு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பிலேயே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செய்தியில், மூத்த தமிழ் தலைவர்களில் ஒருவரான முன்னாள் எதிர்கட்சி தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் மறைவு நாட்டின் அனைத்து தமிழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பாகும்.
மூத்த தலைவர் இரா.சம்பந்தன்
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வில் மிகவும் நிதானமாகவும் பொறுப்புடனும் தனது கொள்கையில் பிடிப்புடனும் செயற்பட்ட ஒரு மூத்த தலைவர் இரா.சம்பந்தன்.
அவருடைய அனுபவம் கல்வி ஞாபசக்தி என்பன ஏனையவர்களை வியக்கவைக்கும்.
தன்னுடைய அரசியல் அனுபவத்துடன் தமிழர்களின் பிரச்சினைக்கான ஒரு சரியான தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்டவர்.
அவருடைய காலத்தில் அது நிறைவேறாமல் போனமையானது பெரும் துரதிஸ்டமே.
எனவே அவருடைய வழியில் சென்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.
இரா.சம்பந்தன் மலையக மக்களுடன் மிகவும் நெருக்கமான ஒரு உறவை கொண்டிருந்ததுடன் மலையக மக்கள் மீது பெரும் மதிப்பை கொண்டிருந்தவர்.
இந்த தருணத்தில் மலையக மக்கள் சார்பாக எமது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.