பொலன்னறுவை (Polonnaruwa) – வெலிகந்தை பிரதேச பாடசாலை ஒன்றில் அத்தன என்ற மூலிகை செடியின் பழ விதைகளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவமானது, நேற்று முன்தினம் (05.07.2024) இடம்பெற்றுள்ளதாக வெலிகந்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரியவருகையில், வெலிகந்த அசேலபுரத்தில் சித்த வைத்தியங்களுக்கு பயன்படுத்தப்படும் மூலிகைச் செடியான அத்தன செடியின் பழத்தின் விதைகளை உட்கொண்டால் போதை ஏற்படும் என முதியவர் ஒருவர் உட்கொண்டு வந்துள்ளதை அவதானித்த பாடசாலை சிறுவன் ஒருவன் அந்த விதைகளை உட்கொண்டபோது அவனுக்கு போதை ஏற்பட்டுள்ளது.
பாடசாலை சிறுவன்
இது தொடர்பாக குறித்த மாணவன் தான் கல்விகற்கும் பாடசாலையிலுள்ள சக மாணவர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் இந்த
விதையை எடுத்துக் கொண்டுவருமாறு மாணவனிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ தினமான வெள்ளிக்கிழமை குறித்த விதையை பாடசாலைக்கு எடுத்துச்
சென்ற மாணவன் சக மாணவர்களுக்கு வழங்கியதையடுத்து அதனை
உட்கொண்ட 4 மாணவர்கள் 3 மாணவிகள் உட்பட 7 மாணவர்கள்
மயக்கமடைந்துள்ளனர்.
இந்தநிலையில், அவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டியை வரவழைத்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இதில் 6 மாணவர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து
வெளியேறியுள்ளதுடன் ஒரு மாணவி தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் எந்த
விதமான ஆபத்துக்களும் இல்லை என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.