வடக்கு மாகாண பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக பல இலட்சம் டொலர்
நாட்டுக்கு வருமானமாக கிடைத்துள்ளதாக கூட்டுறவுத் திணைக்களத்தால் வடக்கு
மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு,
உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர்
மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் மீளாய்வுக்கூட்டம் ஆளுநர்
செயலகத்தில் நேற்று மாலை( 22.11.2024 )இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், “வடக்கு
மாகாணத்தில் சில கிராமங்கள் அரசியல் ரீதியாகவும் பல்வேறு காரணங்களுக்காகவும்
புறக்கணிக்கப்படுகின்றன.
பெண் தலைமைத்துவக் குடும்பம்
அவற்றை அடையாளம் கண்டு முன்னேற்றவேண்டும். பெண்
தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளிட்ட தேவையுடைய மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள்
வழங்கும்போது அவர்களுக்கு காணி இல்லை என்பதைக் காரணம் காட்டி வீடுகளை
வழங்காமல் விடவேண்டாம்.
காணிகளை அவர்களுக்கு கண்டறிவதற்குரிய ஒழுங்குகளை
நாங்கள் முன்னெடுப்போம்.
மேலும், கடந்த காலங்களைப்போன்று பனைசார் உற்பத்திப்
பொருட்களின் உற்பத்திகளை அதிகரிக்கவேண்டும்.
குறிப்பாக சில ஆலயங்களில்
பின்பற்றப்படுவதைப்போன்று பனைஓலையிலான அர்ச்சனைப் பெட்டிகளை
ஊக்குவிக்கவேண்டும், என்றார்.