ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இன்று திறைசேரியில் 5.5 பில்லியன் டொலர்களுக்கு மேல் சேகரிக்கப்பட்டுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன (Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார்.
இதேவேளை மக்களுக்கு போதுமான எரிபொருள் மற்றும் எரிவாயுவை வழங்கவும் ஏற்பாடு செய்தார் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கம்பஹாவில் (Gampaha) நேற்று (21) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டைப் பொறுப்பேற்ற ஜனாதிபதி
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ”இன்றைய தினம் கம்பஹா மாவட்டத்திற்கு விசேட தினமாகும். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
ஜனாதிபதி இலங்கைக்கு புதிய அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இன்று இந்த மேடைகளில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்திருக்கிறார்கள்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது நாட்டைப் பொறுப்பேற்க எந்த தலைவரும் முன்வரவில்லை.
ஜனாதிபதி ரணில் அதனை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், இன்று இலங்கை எங்கே இருந்திருக்கும் என்பதை மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும்.
எரிபொருள், எரிவாயு வரிசைகள்
அவர் நாட்டைப் பொறுப்பேற்றார். பொருளாதாரத்தை மீட்டெடுத்தார் மற்றும் வாழக்கூடிய சூழலை உருவாக்கினார். அவரது வீட்டையும் கலகக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.
போராட்டத்தின் மூலம் அரசியல் குழுக்கள் நாட்டை தீக்கிரையாக்கி ஆட்சிக்கு வரலாம் என்று நம்பினர்.
ஆனால் ஜனாதிபதி தனது சொந்த வீட்டை எரித்த போதும் மக்களுக்காக முன் வந்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் தீர்மானங்களை எடுத்தார்.
அன்று எரிபொருள், எரிவாயு வரிசைகள், மற்றும் பதினான்கு மணி நேர மின்வெட்டு இருந்தபோது எந்தத் தலைவரும் நாட்டைப் பொறுப்பேற்க முன்வரவில்லை.
ரணில் விக்ரமசிங்கவே பொருளாதாரப் பிரச்சினையை மிக எளிமையான முறையில் தீர்த்து வைத்தார். அதைத் தாங்கிக்கொள்ள முடியாத அரசியல் குழுக்கள் இன்று மேடைகளில் ஏறி, சேறு பூசும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதோடு, அதன் மூலம் அதிகாரத்தைப் பெற முயற்சி செய்கின்றனர்.
ரணில் விக்ரமசிங்க முதலில் பிரதமராக பதவியேற்று பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மக்களுக்கு போதுமான எரிபொருள் மற்றும் எரிவாயுவை வழங்க ஏற்பாடு செய்தார்.
திறைசேரியில் சேகரிக்கப்பட்ட டொலர்கள்
நாட்டிற்குப் போதிய அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தரும் பொருளாதார நோக்கு அவருக்கு இருந்தது.
திறைசேரியில் இன்று 5.5 பில்லியன் டொலர்களுக்கு மேல் சேகரிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு போதுமான அந்நியச் செலாவணி அரசாங்கத்திடம் உள்ளது.
புதிய அரசியல் கலாச்சாரத்துடன் முன்னோக்கிச் சென்று நாம், அடுத்த தசாப்தத்தில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை நிச்சயமாக வெற்றிபெறச் செய்ய கடுமையாக உழைப்போம். அவரின் வெற்றிக்காக இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.” என தெரிவித்தார்.