காணி உறுதிப்பத்திரம் தயாரிப்பதற்காக வர்த்தகர் ஒருவரிடம் 02 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கெக்கிராவ பிரதேச செயலக காணி அதிகாரி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி நேற்று (22.07.2024) இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளுக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காணி உறுதிப்பத்திரம்
இதன்போதே, குறித்த காணி அதிகாரி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட காணி அதிகாரி, காணி உறுதிப்பத்திரம் தயாரிப்பதற்காக கெக்கிராவ பிரதேசத்திலுள்ள வர்த்தகர் ஒருவரிடம் 500,000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளார்.
அதில் இரண்டு இலட்சம் ரூபாவை, நேற்று (22) பெற்று கொண்டுள்ளார் எனவும் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைதான அதிகாரி பொலன்னறுவை – குசும் பொகுன பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கெக்கிர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் ஆகஸ்ட் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.