எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிமாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தாம் ரணில் விக்ரமசிங்கவை நன்றாக அறிந்தவர் எனவும் அதனால் நிச்சயமாக நூற்றுக்கு நூறு வீதம் அவர் போட்டியிடமாட்டார் என்பதை உறுதிபட கூறுவதாகவும் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வேட்பாளரை நிறுத்துவதற்கான சாத்தியங்கள்
ஜனாதிபதியினால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவு இன்றி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் வேறு ஒரு வேட்பாளரை நிறுத்துவதற்கான சாத்தியங்கள் தென்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான வேட்பாளர் ஒருவரை பொதுஜன முன்னணி தேர்தலில் போட்டியிடச் செய்தால், ரணிலுடன் இருக்கும் நபர்களுக்கு பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.