வரலாற்று சிறப்புமிக்க மன்னார் மருத மடுத்திருப்பதியில் மடுமாதா திருவிழா
எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது.
மடு திருப்பதி புனித மரியாளின் பெயரில் இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற
ஒரு திருத்தலமாகும். அந்த வகையில் மரியன்னை விண்ணேற்றம் அடைந்த
திருநாளில் ஒவ்வொரு வருடமும் இத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றமை
சிறப்பம்சமாகும்.
திருவிழா – திருப்பலி எதிர்வரும் 15ஆம் திகதி வியாழன் 6.15 மணிக்கு மன்னார்
மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில்
நிறைவேற்றப்படவுள்ளது.
நாட்டின் ஏனைய மறை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்கள், குருக்கள் ஆகியோரின்
பங்கேற்புடன் திருவிழாக் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட உள்ளது.
மேலும், திருவிழா நிகழ்வுகள் திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம்
அடிகளார் தலைமையில் கடந்த 6ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15ஆம்
திகதி காலை திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.
திருப்பலி ஒப்புக் கொடுத்தல்
மடு திருப்பதி சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருத்தலமாகும். தமிழ் – சிங்கள மக்களின் விசுவாசத்திற்கு உரிய வழிபாட்டுத் தலமாக இது திகழ்கிறது.
வருடா
வருடம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் மடு
திருவிழாவில் கலந்து கொண்டு வருகின்றனர்.
திருவிழா திருப்பலியில் சுமார் 8 இலட்சம் மக்கள் வரை கலந்து கொள்வர்.
ஒல்லாந்தர் இலங்கையை ஆண்ட காலப்பகுதியோடு தான் மடுத்திருப்பதியின் வரலாறும்
ஆரம்பமாகின்றது. மன்னாரில் இருந்து 10 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் இருக்கும்
மாந்தை என்ற கிராமத்தின் ஆலயம் தான் மடுமாதா திருச்சுருபத்தின் ஆரம்ப
இருப்பிடமாகும்.
‘செபமாலை மாதா’ என்று அழைக்கப்பட்ட அந்தத் திருச்சுருபம்
தான் இன்றைய மடுமாதா. ஒல்லாந்தருடைய ஆட்சியில் கத்தோலிக்கருக்கு எதிராக கொடூரமான வேத கலாபனை
ஆரம்பித்தது.
இந்தக் கலாபனையில் இருந்து தங்களைக் காப்பாற்றும் பொருட்டும்
செபமாலை மாதாவின் திருச்சுருபத்தைப் பாதுகாக்கும் பொருட்டும் மாந்தை மக்கள்
அங்கிருந்து புறப்பட்டனர்.
குருக்களின் துணையில்லாத அந்த வேளையிலும் மாந்தையில் இருந்த 20 பக்தியுள்ள
குடும்பங்கள் செபமாலை மாதாவின் திருச்சுருபத்தைத் தூக்கிக் கொண்டு அடர்ந்த
வன்னிக் காட்டில் புகுந்தனர்.
திசை தெரியாது அங்கும் இங்கும் அலைந்தனர். இறுதியாக ‘மருதமடு’ என்ற இடத்திற்கு
எவ்வித ஆபத்தும் இன்றி மாதாவின் வழி நடத்தலோடு வந்து சேர்ந்தார்கள்.
மடுத் திருப்பதியின் அற்புத ஆற்றல் உலகறிந்த விடயமாகும்.
மடு அன்னையின்
பரிந்துரையால் பல அற்புதங்கள் நடைபெறுகின்றன. அதனால் தான் இப்பதி நோக்கி
மக்கள் இலட்சக் கணக்காக கூடுகின்றனர்.
பொன் விளையும் பூமி என்பது போல் மடு அன்னையின் திருப்பதியில் உள்ள மண் கூட
மருந்தாகத் திகழ்கின்றது. அந்த மண் அருள் நிறைந்த மண்! ஆற்றல் நிறைந்த மண்!
இத்திருத்தல மண்ணுக்கு சிறப்பான பெருமை உண்டு.
உலகின் எங்குமே இல்லாத நிலையில் திருத்தலத்திலிருந்து பெறப்படும் மண் நோய்
தீர்க்கும் அருமருந்தாக விளங்குகிறது.
இத்திருப்பதியின் வளாகத்திலிருந்து பெறப்படும் மண் ஆசீர்வதிக்கப்பட்டு பிரதான
ஆலயத்தின் ஒரு மூலையில் அதற்கென அமைக்கப்பட்ட ஒரு தொட்டியில்
வைக்கப்படுகின்றது. இந்த மண்ணை மக்கள் தம் வீடுகளுக்கு எடுத்துச்
செல்கிறார்கள்.
மடுத் திருப்பதியின் வரலாறு
குணமளிக்கும் மருந்தாக இந்த மண்ணைப் பயன்படுத்துகின்றார்கள். ‘கோயில் மருந்து’
என்று இது அழைக்கப்படுகிறது.
மடுத் திருப்பதியின் புனிதத்திற்கு அருள் வளத்திற்கும் சிறப்பான ஒரு
எடுத்துக்காட்டாக ‘கோயில் மருந்து’ என்று அழைக்கப்படும் இந்த மடு மண் அன்று
தொடக்கம் இன்று வரை திகழ்கின்றது.
பாம்பு தீண்டிய நிலையில் இங்கு
கொண்டுவரப்படும் மக்கள் இப்பதியை அடைந்ததும் குணம் பெறுகின்றார்கள் என்பதும்
மக்களின் ஆழமான விசுவாசமாகும்.
‘கருணைமழை பொழியும் கானகச் செல்வி’ என மடு அன்னை அழைக்கப்படுகின்றாள்.
குறைவுபடாத தாயன்புக்கு இலக்கணமாக இவள் விளங்குகின்றாள்.
துன்பங்கள், துயரங்கள், இழப்புக்கள் மத்தியில் மக்கள் ஆறுதல் தேடித்
தஞ்சமடையும் தாயாக மடு அன்னை விளங்குகிறாள். தாயன்பு – அது தனி அன்பு அது
தனித்துவமான அன்பு கூட. அம்மை அப்பனாக விளங்கும் இறைவனுடைய தாயன்பை
திருவிவிலியம் தெளிவாகச் சொல்கிறது.
‘நீங்கள் மார்பில் அணைக்கப்படுவீர்கள். மடியில் வைத்துக் சீராட்டப்படுவீர்கள். ஒரு தாய் தன் குழந்தையைத் தேற்றுவதுபோல நானும் உங்களைத்
தேற்றுவேன்.’
இறைதந்தையின் இத்தகைய அன்பையே மடு அன்னையும் பிரதி பலிக்கின்றாள்.
‘பெரும் சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடம்
வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்’ என்று நம் ஆண்டவர் இயேசு
கூறியதற்கிணங்க ஆண்டவன் இயேசுவின் தாயல்லவா நம் மடு அன்னை! தனயனின் அதே
வார்த்தைகளை தாயும் கூறி அழைக்கின்றாள்.
அந்த அன்னையின் அருகில் இருக்க,அவளது
பாதத்தில் அமர்ந்து தம் குறைகளைச் சொல்ல, அவளது தாயன்பில் திழைத்திருக்க அவளது
பிள்ளைகள் இலங்கையின் நாலா திசைகளிலிருந்தும் வந்து குவிகின்றார்கள்.
அன்னையிடமிருந்து ஆறுதலையும் தேறுதலையும் பெறுகின்றார்கள்.
மடு ஆலயம்
மடுத்திருப்பதி
ஒற்றுமையினதும் ஒன்றிப்பினதும் மத்திய நிலையமாக திகழ்கின்றது.
எக்குலத்தவராயினும், எம்மொழியினராயினும் இஎவ்வினத்தவராயினும் அனைவரும்
இறைவனின் பிள்ளைகளே என்ற உணர்வுடன் இத்திருப்பதி அனைத்து மக்களையும்
வரவேற்கின்றது.
இத் திருப்பதியின் நுழைவாயிலில் அமைந்துள்ள மடு அன்னையின் திருச்சுருபம்
‘வரவேற்பு மாதா’ என்று அழைக்கப்படுகிறது. மடு அன்னை இரு கரங்களையும்
விரித்தவராய் தன் திருப்பதி நோக்கி வரும் அனைவரையும் தன் கைகளை நீட்டி
அழைக்கும் தோற்றத்தோடு விளங்குவது கண்ணுக்கினிய காட்சியாகும்.
மக்கள்
மத்தியில் மன்னிப்பு, ஒப்புரவு, சமாதானம் போன்ற உயர்ந்த விழுமியங்களை
ஏற்படுத்துவதற்கு அவர்கள் ஒன்று சேரக்கூடிய ஒரே இடம் இந்த நாட்டில்
மடுத்திருப்பதி தான்.
கன்னி மரியாள் களங்கமற்ற நீர்ச்சுனை. இறை மகனையே தன் உதரத்தில்
சுமந்ததிருப்பேழை. கடவுளையே தாங்கி நின்ற பதிர்ப் பாத்திரம்.
ஆன்மாவோடும்
உடலோடும் விண்ணேற்றம் அடைந்த அன்னை மரியாவுக்கு மடுப்பதியில் பெருவிழா. அலகையை
வென்று அகிலத்தைக் காத்த அந்த அன்னைக்கு இறைவன் அளித்த அன்புப் பரிசு அவரை
விண்ணகத்திற்கு அழைத்துக்கொண்டது.
தாய் விண்ணேறிச் சென்றால் சேய்கள் நமக்கெல்லாம் அது பெருவிழா தானே!
அதனால் தான் மடுத்திருப்பதி விழாக்கோலம் பூண்டு மக்கள் வெள்ளத்தில் நிரம்பி
வழிகின்றது.
‘மருதமடு மாதாவே மனுக்குலத்தின் தாயாரே’ என்ற கான வரிகள் காற்றில் என்றும்
கலக்கட்டும். அதன் வழி மருதமடு தாயின் புகழ் என்றும் நிலைக்கட்டும்.