ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து உத்தியோகபூர்வ சேவைகள் என்ற பெயரில் பொது மக்களின் தனிப்பட்ட முக்கிய தகவல்களை சேகரிக்கும் இணையத்தளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் (SLCERT|CC) சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல (Charuka Damunupola) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் விளக்குகையில், “குறித்த போலி இணையத்தளமானது, உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை ஒத்ததாக கணப்டுகின்றது.
தனிப்பட்ட தகவல்
குறிப்பாக, இவை தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு பொதுத்துறை சார்ந்த வெற்றிடங்களுக்கு புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை விளம்பரப்படுத்துகின்றது.
இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்காக ஒரு புதிய இணையப்பக்கம் தோன்றுகின்றது. குறித்த இணையப்பக்கத்தில் உள்நுழைந்தப் பின்னர் தனிப்பட்ட தகவலுடன் ஒரு கேள்வித்தாளை நிரப்ப விண்ணப்பதாரர்கள் தூண்டப்படுகின்றனர்.
முடிவில், பல வாட்ஸ்அப் குழுக்களில் இறுதி இணைப்பைப் பகிருமாறு ஒரு செய்தி அறிவுறுத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க நிறுவனங்கள்
இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட இருவர் முறைப்பாடுகள் செய்துள்ளதாகவும், குறித்த இணையத்தளத்தினை முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், சமூக ஊடக குழுக்கள் மூலம் பரப்பப்படும் போலி அழைப்பு இணைப்புகள் மற்றும் வலைத்தளங்களில் உள்நுழைய வேண்டாம் எனவும், அவ்வாறான இணைப்புகள் தொடர்பான விgரங்களை அரசாங்க நிறுவனங்கள் மூலம் சரிபார்க்குமாறு கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.