டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய பாதீட்டு விவாத அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இந்த அரசால் முன்வைக்கப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கு மீண்டெழும் செலவுக்காக 5.9 பில்லியன் ரூபாவும் மூலதன
செலவுக்காக 10.1 பில்லியன் ரூபாவும் ஆக மொத்தம் 16 பில்லியன் ரூபா
ஒதுக்கப்பட்டுள்ளது.
அடிப்படையான அத்திவாரம்
இது மொத்த பாதீட்டில் 0.4 வீதமாகும். நாட்டின் பொருளாதரத்தை டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றி, அபிவிருத்தி அடைய நினைக்கும் இலங்கை போன்ற நாட்டுக்கு
இந்த ஒதுக்கம் சிறிதும் போதுமானது அல்ல.
குடியரசுத் தலைவர் தனது உரையில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார வருமானத்தை 15
பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிக்க கூடிய சாத்தியம் காணப்படுவதாக
குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழலில் இந்த அமைச்சுக்கான ஒதுக்கீடானது, கடந்த
ஆண்டோடு ஒப்பிடும் பொழுது 623 மில்லியனால் குறைக்கப்பட்டுள்ளமையானது
மகிழ்ச்சி அளிக்கும் விடயம் அல்ல.
டிஜிட்டல் உட்கட்டமைப்பு முதலீடு என்பது வெறுமனே ஒரு விருப்பச் செலவு அல்ல. அதுவே டிஜிட்டல் பொருளாதரத்திற்கு அடிப்படையான அத்திவாரம் ஆகும்.
இலங்கையின் மூலோபாயம்
நவீனமயமாக்கல்
இல்லாமல் அரசு சேவை வழங்கலை திறம்பட செய்யவோ, வெளிப்படைத் தன்மையை உறுதிப்
படுத்தவோ அல்லது நீண்டகால நிதி நலனுக்கு அடிப்படையான வரித் தளத்தை வெற்றியாக
விரிவுபடுத்தவோ முடியாது.
டிஜிட்டல் பொருளாதார முதலீடானது, இலங்கையின் திறமையான பணியாளர்களை
மேம்படுத்துவதோடு , தெற்காசியாவிற்குள் ஓர் ஆற்றல் மிக்க, நடுத்தர அடுக்கு
டிஜிட்டல் சேவை மையமாக நாட்டை நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வழிமுறையானது, உறுதியான பொருளாதார வளர்ச்சியை சமூக சமநிலையுடன்
இணைக்கின்றது. குறிப்பாக விளிம்பு நிலைப் பகுதியினரை உயர்த்துவதை நோக்கமாகக்
கொண்டது. மேலும் நகரத்து தொழில் முனைவோர் முதல் கிராமப்புற விவசாயிகள் வரை
அனைத்து குடிமக்களும் டிஜிட்டல் பாய்ச்சலால் பயனடைவதை உறுதி செய்கிறது.
இலங்கையின் முதலீடுகள் உலகளவில் நிரூபிக்கப்பட்ட சிறந்த நடைமுறைகளை
ஏற்றுக்கொள்கின்றன என்பதை உறுதிப்படுத்த, இலங்கையின் மூலோபாயம் உலகின் முன்னணி
டிஜிட்டல் பொருளாதார நாடுகளுடன் தொடர்ந்து ஒப்பிடப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

