சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தூது அனுப்பியதாகவும், ஆனால் அந்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) பெலியத்தையிலுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தேர்தல் குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அந்த கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி, நம்ப முடியாத ஒருவரின் ஆதரவை தமக்கு வேண்டாம் என தெரிவித்ததாகவும் விவசாய அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மகிந்த அமரவீர தெரிவிப்பு
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர் இப்போது போக வழியில்லாத நிலையில் இருக்கிறார், எந்தக் கட்சியும் அவரை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை.
தன் மீது பிறர் வைத்துள்ள நம்பிக்கையை தாமே சிதைக்கும்போது இவ்வாறான நிலையே ஏற்படும். இப்போது அவர் ஏதாவது ஒரு குப்பையை கிளற தேடுகிறார்.
ஆனால், ஒரு முன்னாள் ஜனாதிபதி, இவ்வளவு கீழ்த்தரமான நிலைக்குச் சென்றதை நினைத்து நாங்கள் வருந்துகிறோம்“ என்று தெரிவித்துள்ளார்.