Courtesy: Sivaa Mayuri
அரச ஊழியர்களின் சம்பளத்தை 2025 ஆம் ஆண்டு முதல் 25,000 ரூபாவால் அதிகரிக்கும் அமைச்சரவையின் அண்மைய தீர்மானம், ஜனாதிபதித் தேர்தலில் அரச ஊழியர்களின் சுதந்திரமான வாக்களிப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுயாதீன கண்காணிப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய அமைச்சரவை, அரசாங்க ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குவதுடன், 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து அவர்களின் சம்பளத்தில் 24 வீத அதிகரிப்பையும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
அரசு ஊழியர்களின் சம்பளம்
இது தொடர்பில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் கடந்த சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து பல்வேறு தீர்மானங்களை எடுத்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக, குறிப்பாக தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் நடவடிக்கை, அவர்களின் சுதந்திரமான வாக்களிப்பை தெளிவாக பாதிக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே தொழிற்சங்கங்கள் 10,000 ரூபாய் சம்பள உயர்வைக் கோரியபோது, அதற்குப் போதிய நிதி இல்லை எனக் கூறி அரசாங்கம் அதனை நிராகரித்திருந்தது.
எனினும் தற்போதைய தேர்தல் சூழ்நிலையில் திடீரென 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை உயர்த்தி முடிவெடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பெப்ரல் குறிப்பிட்டுள்ளது.