கனடா(canada) பிரம்டனில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபி, இலங்கையின் கடந்தகால மீறல்கள் ஒருபோதும் மறக்கப்படமுடியாதவை என்பதற்கும், எமது மீண்டெழும் தன்மைக்குமான நிலையான சின்னமாக தமிழினப்படுகொலை நினைவுத்தூபி திகழும் என கனடாவின் சுதேசிய உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி(Hari Anandashankari) தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு வியாழக்கிழமை (15) அடிக்கல் நாட்டப்பட்ட நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழினப்படுகொலை நினைவேந்தல் அங்கீகரித்த நாடாளுமன்றம்
மேமாதம் 18 ஆம் திகதியை தமிழினப்படுகொலை நினைவேந்தல் நாளாக அங்கீகரித்த முதலாவது தேசிய நாடாளுமன்றம் என்ற வரலாற்று முக்கியத்துவத்தையும் கனடா உரித்தாக்கியிருக்கின்றது’ என ஹரி ஆனந்த சங்கரி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை அமைக்கப்படவுள்ள நினைவு தூபி தொடர்பில் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
அப்பாவி உயிர்களை ஒருபோதும் மறக்கமாட்டோம்
தமிழினப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட 100,000 க்கும் மேற்பட்டோரை நினைவுகூரும் நோக்கில் இந்நினைவுத்தூபி நிர்மாண நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதற்காக கனேடியத் தமிழர்களின் தேசிய பேரவை, பிரம்டன் தமிழர் அமைப்பு மற்றும் பிரம்டன் தமிழ் சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
‘அத்துடன் இலங்கை அரசாங்கத்தினால் சிறுவர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் வன்புணரப்பட்டனர். கிராமங்கள் பாரிய மனிதப்புதைகுழிகளாக மாற்றப்பட்டன.
இலங்கை அரசாங்கத்தினால் காவு வாங்கப்பட்ட இந்த அப்பாவி உயிர்களை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம்’ எனவும் அவர் அப்பதிவில் தெரிவித்திருக்கிறார்.