தென்பகுதி வேட்பாளர்கள் காத்திரமான பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அது தொடர்பில் கூடி ஆராய்ந்து முடிவுகளை எடுப்போம் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியா (Vavuniya), கோவில்புதுக்குளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (25) இடம்டபெற்றது.
அதன்பின் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும், தமிழ் பொது வேட்பாளரை நிறுத்திய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடல்
தமிழ் பொது வேட்பாளரை வெல்ல வைப்பதற்கான நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த விடயங்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது.

ஏற்கனவே வடக்கு – கிழக்கில் பிரச்சார வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல ஜனநாய தமிழ் தேசியக் கூட்டனி தனது முழுமையான பங்களிப்பை வழங்கும்.
மாவட்ட ரீதியான முகவர்களை நியமிக்க வேண்டியுள்ளது. மாவட்ட ரீதியாக தேர்தல் அலுவலகங்களை திறக்கப் வேண்டியுள்ளது. அதனை எவ்வாறு மேற்கொள்வது என பல விடயங்களை பேசியுள்ளோம்.
காத்திரமான பேச்சுவார்த்தை
இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் சிவில் அமைப்புக்களுடன் கலந்துரையாடி பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

நாம் ஒன்று சேர்ந்து பொதுவேட்பாளருக்கு தொடந்தும் வாக்கு சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம்.
எதிர்காலத்தில் காத்திரமான பேச்சுவார்த்தைக்கு வேட்பாளர்கள் வருவார்களாக இருந்தால் அது தொடர்பில் நாம் கூடி ஆராய்ந்து முடிவுகளை எடுப்போம் என பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

