தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனின் (P. Ariyanethran) தேர்தல் விஞ்ஞாபனம் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு நேற்றைய தினம் (26) யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.
இதன்போது தேர்தல் விஞ்ஞாபனத்தை விரைவில் வெளியிடுவது, தென்னிலங்கையிலிருந்து வருகின்ற அழைப்புக்களை ஏற்பதா? இல்லையா? என்பது குறித்து ஒருமித்து முடிவெடுப்பது மற்றும் தேர்தல் பிரசாரம் என்பன தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகத் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் (Guruswamy Surendran) தெரிவித்துள்ளார்.
தேர்தல் விஞ்ஞாபனம்
இந்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ்த் தேசிய கட்சிகளின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றையதினம் (26) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.