எந்த ஒரு வேட்பாளரும் சரியான கொள்கையுடனும் கோட்பாட்டுடனும் இந்த அரசியல்
களத்தில் இல்லை என மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண ஊடக மையத்தில் நேற்று (29.08.2024) ஊடகவியலாளர்
சந்திப்பை நடத்திய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில்,
“எந்த ஒரு வேட்பாளரும் சரியான கொள்கையுடனும் கோட்பாட்டுடனும் இந்த அரசியல்
களத்தில் இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
இந்த வறுமையை நாங்கள் நிரப்ப வேண்டிய தேவையை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம்.
தீர்வு திட்டம்
எனவே, இந்த கொள்கை பிரகடனத்தின் ஊடாக வர்க்க பிரச்சனைகளில் இருந்து இனப்பிரச்சினை வரையிலான பிரச்சினைகளில் இருந்து, எப்படி வெளிவருவது தொடர்பான விடயங்களை மிகத் தெளிவாக குறிப்பிட்டு இருக்கின்றோம்.
குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களை பொருத்தவரை, மிக நீண்ட காலமாக ஒரு
பாரிய சிக்கலுக்குள் இருக்கின்றனர். இனப்பிரச்சினை எங்களை கொன்று குவித்திருக்கின்றது.
மக்கள் இனப்பிரச்சினையினால் இழந்தவை கொஞ்ச நஞ்சம் அல்ல. இந்த இனப்பிரச்சினைக்கு தீர்வற்ற முறையில் இந்த விடயம் செல்ல முடியாது.
எனவேதான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று நாங்கள் சியாச்சி என்ற தீர்வுத் திட்டத்தை முன்வைத்திருக்கின்றோம்.
இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் தீர்க்கமான
பல கொள்கைகளோடு அடித்தட்டு மக்களினுடைய அடிப்படை தேவைகள் மற்றும் இந்த நாட்டுக்கான சரியான பாதை போன்றவற்றை மிக ஆழமாக சிந்தித்து
எங்களுடைய கொள்கையாக வெளியிட்டுள்ளோம்.
அடிப்படை அரசியல் கோரிக்கைகள்
குறிப்பாக 39 வேட்பாளர்கள் இருந்தாலும் இங்கு இரண்டே இரண்டு கொள்கைகள்
மட்டும் தான் இருக்கின்றன என்பதை நாங்கள் இந்த தேர்தல் பிரச்சாரங்களில்
அடிப்படை அம்சமாக குறிப்பிடுகின்றோம்.
எங்களுடைய கொள்கை மிகவும் தனித்துவமாக இருப்பதோடு அவை மக்களுக்கானது. நாங்கள் கொள்கை
பிரகடனத்திலும் மக்களின் கொள்கை, மக்களின் வேட்பாளர் என்று தான்
பாவிக்கின்றோம்.
இந்த கொள்கைகளை நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள
வேண்டும். எங்களுடைய அடிப்படை அரசியல் கோரிக்கைகளுக்கு பதில் இல்லை.
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மிக மோசமான அடக்கு முறையினை எதிர்நோக்குகின்றனர். இங்கு சட்டவிரோதமாக விகாரைகள் கட்டப்படுவதோடு ஆயிரக் கணக்கான இராணுவ வீரர்களையும் குவித்து வைத்திருக்கின்றார்கள்.
தொடர்ந்து பயங்கரவாத தடை சட்டம் உள்ளது. இப்படியான எந்த
விடயங்களுக்கும் தீர்க்கமான ஒரு பதிலை சொல்ல முடியாத கட்சிகளும் வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்” என கூறியுள்ளனர்.