ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா இளைஞர் மாநாட்டில் தேர்தல் சட்டம் மீறப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் நாடளாவிய ரீதியில் உள்ள இளைஞர் கழகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட மதிய உணவை வழங்குவதைத் தடுப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
தேசிய இளைஞர் சேவை
இந்நிலையில், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர், இந்த நிகழ்வில் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார் எனவும் கொழும்பு மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், அரச சொத்தைப் பயன்படுத்தியும் தேர்தல் சட்டங்களை மீறியும் இளைஞர் சேவை மன்றத்தின் நடனக் குழுவும் மாநாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.