ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின்
பிரசாரக் கூட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்று வரும் நிலையில் அவருக்கு
ஆதரவு தெரிவித்து ஏட்டிக்குப் போட்டியாக இரண்டு பேரணிகள் நடைபெற்றுள்ளன.
அந்தவகையில், குருமன்காட்டில் இருந்து கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க
அமைச்சர் கே.கே. காதர் மஸ்தானின் ஆதரவாளர்கள் பேரணியாக ஜனாதிபதியின்
பிரசாரக் கூட்டம் இடம்பெறும் வைரவபுளியங்குளம் மைதானத்தைச் சென்றடைந்தனர்.
இரு பேரணி
சமநேரத்தில், வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயப் பகுதியில் இருந்து
நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.
திலீபனின் ஆதரவாளர்கள் பிரசாரக் கூட்டம் இடம்பெறும் வைரவபுளியங்குளம்
மைதானத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றடைந்தனர்.
இந்த இரு பேரணியிலும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தப் பேரணிகளால் வவுனியா – மன்னார் வீதி மற்றும் நகரப் பகுதிகளில் கடும்
வாகன நெரிசல் ஏற்ப்பட்டிருந்தது.