பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட ஆறு பேர் கொல்லப்பட்டமைக்கு காரணமான ஹமாஸ் (Hamasa) தலைவர்களை பழி தீர்ப்போம் என இஸ்ரேல் (Israel) பிரதமர் நெதன்யாகு (Netanyahu) தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட ஆறுபேரின் உடல்களை தெற்கு காசாவிலுள்ள (Gaza) சுரங்கப்பாதை ஒன்றிலிருந்து மீட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று (31) தெரிவித்தது.
இதற்கு காரணமானவர்களை இஸ்ரேல் கண்டுபிடித்து தண்டிக்கும் என்றும், எஞ்சியுள்ள கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை அடைவதற்கு தாம் உறுதியாக இருப்பதாகவும் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
தொடர் வான்வழித் தாக்குதல்
இருப்பினும், பணயக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்கள் சங்கம், ஏற்பட்டுள்ள இறப்புகளுக்கு நெதன்யாகு பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தொடர் வான்வழித் தாக்குதல்களின் விளைவாகவே குறித்த ஆறு கைதிகளும் கொல்லப்பட்டதாக ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் இன்று (01) அறிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, இந்த ஆண்டின் தொடக்கத்தில், இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுவீச்சின் காரணமாக சிறைபிடிக்கப்பட்ட மேலும் ஏழு கைதிகள் கொல்லப்பட்டதாகவும் பாலஸ்தீனிய குழு ஒன்று குறிப்பிட்டுள்ளது.