காசாவில் (Gaza) ஆறு பணயக்கைதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, எஞ்சியவர்களை மீட்க இஸ்ரேலிய (Israeli) அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் மீது ஹமாஸ் (Hamas) அமைப்பினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 அன்று தாக்குதல் நடத்தி சுமார் 1,200 பேரைக் கொலை செய்ததுடன் சுமார், 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட ஆறு பேரின் உடல்களை தெற்கு காசாவிலுள்ள (Gaza) சுரங்கப்பாதை ஒன்றிலிருந்து மீட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று முன்தினம் (31) தெரிவித்திருந்தது.
போர் நிறுத்த ஒப்பந்தம்
இதையடுத்து, இஸ்ரேலிய அரசுக்கு எதிராக அந்நாட்டின் ஜெருசலேம், டெல் அவிவ் (Tel Aviv) உள்ளிட்ட நகரங்களில் நேற்றும் (01), இன்றும் (02) பெரும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
அதன்படி, ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் பணயக்கைதிகள் உயிரோடு வந்திருப்பார்கள் என்றும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களே இதற்கு பொறுப்பு ஏற்கவேண்டும் என போராட்டதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, ஜெருசலேமில் (Jerusalem), போராட்டக்காரர்கள் வீதிகளை மறித்து பிரதமரின் இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர். டெல் அவிவின் பிரதான நெடுஞ்சாலைகளில், கொல்லப்பட்ட பிணைக்கைதிகளின் படங்களுடன் கொடிகளை ஏந்தியவாறு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலை நிறுத்தப் போராட்டம்
இதேவேளை, இஸ்ரேலிய தொழிற் சங்கங்களின் அழைப்பை ஏற்று இன்று அந்நாட்டில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், வர்த்தக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அனைவரும், இஸ்ரேலிய அரசு விரைவாக ஹமாஸ் அமைப்புடன் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் மற்றும் எஞ்சிய பணயக்கைதிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/nMWrgJ2iBkY