எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கையின் நான்கு பிரதான முச்சக்கரவண்டி சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம், தேசிய Taxi app முச்சக்கரவண்டி தொழிற்துறை சங்கம், ஐக்கிய பயணிகள் போக்குவரத்து சேவை வல்லுநர்கள் சங்கம், மேல் மாகாண முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் என்பன ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்துள்ளன.
முச்சக்கரவண்டி சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் ஆயிரம் பிரதிநிதிகள் புதன்கிழமை (04) காலை கொழும்பு காலிமுகத்திடல் போராட்ட பூமியில் ஒன்றுகூடியதுடன், தங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்திக்க வேண்டும் என விடுத்த கோரிக்கையை அடுத்து அந்த இடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.
தீர்க்கப்படாத பிரச்சினை
கடந்த 25 வருடங்களாக நான்கு நிறைவேற்று ஜனாதிபதிகளின் கீழ் தீர்க்கப்படாத முச்சக்கரவண்டி தொழிற்துறை ஒழுங்குபடுத்தல் தொடர்பான பிரச்சினைக்கு 24 மணித்தியாலங்களில் தீர்வை வழங்கியமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்த முச்சக்கர வண்டி சாரதிகள், கடந்த காலத்தில் தங்களின் தொழில்களை மேற்கொள்ள முடியாமல் பல நாட்களாக எரிபொருள் வரிசையில் தவித்ததாகவும் அந்த நிலையில் இருந்து ஜனாதிபதியே தங்களை மீட்டதாகவும், மீண்டும் அவ்வாறானதொரு நிலைமைக்கு முகம் கொடுக்க தாம் தயாரில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2025 ஆம் ஆண்டு முதல் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக கடனில் தவிக்கும் முச்சக்கரவண்டி சாரதிகளின் கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைக்க அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக சந்தர்ப்பம் வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.