Courtesy: Sivaa Mayuri
ஜெனீவா மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம், நேற்று திங்கட்கிழமை,சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான சில கருத்துக்கள் மூலம், அதற்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை மீறுவதாக இலங்கை குற்றம் சாட்டியுள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க, இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையானது, மனித உரிமைகள் தொடர்பான அதன் கட்டளைக் கோளத்திற்கு அப்பால் சென்று பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதி மற்றும் வரவு செலவுத் திட்டங்கள் குறித்து கருத்து தெரிவிப்பது ஆச்சரியமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணையாளர்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், நேற்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது அமர்வின் போது இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்த பின்னரே ஹிமாலியின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
இது, இலங்கையின் எதிர்காலத்திற்கு எதிர்மறையான கண்ணோட்டத்தை முன்வைக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாத்தல் மற்றும் சமீபத்திய கடுமையான சவால்களை கடந்து, உணவு, ஆற்றல் மறுசீரமைப்புடன் இயல்புநிலைக்கு இலங்கை திரும்பியுள்ளமை ஆகியவற்றை ஆணைக்குழு அங்கீகரிக்கத் தவறிவிட்டது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
51-1 தீர்மானம்
தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள், ஆணைக்குழு தமது அறிக்கையில் குறிப்பிடவில்லை.
இந்த நிலையில் மனித உரிமைகள் பேரவையின் 51-1 தீர்மானத்திற்கு இலங்கையின் எதிர்ப்பை அருணதிலக மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் பிளவுபட்ட வாக்கெடுப்பின் மூலம் இலங்கையின் அனுமதியின்றி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.