சர்வதேச நாணய நிதியத்தை விவாதத்திற்கு அழைக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) யோசனையை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) நிராகரித்துள்ளார்.
அம்பலாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்தை ஏற்பாடு செய்ய முடியும் எனவும், இரு கட்சிகளின் பொருளாதார கொள்கைகள் தொடர்பான எந்தவொரு விடயத்தையும் விவாதிக்க முடியும் என்றும் அநுரகுமார மீண்டும் சவால் விடுத்துள்ளார்.
ரணிலின் பொறுப்பற்ற அறிக்கை
மேலும் அவர் தெரிவிக்கையில், “ஜனாதிபதி விக்கிரமசிங்க மேடையில் தொடர்ந்து என்னிடம் கேள்விகளை முன்வைக்கிறார்.
எனவே, நான் அவரை பகிரங்க விவாதத்திற்கு சவால் விடுத்தேன்.
பின்னர், அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் வருவேன் என்றார்.
சர்வதேச நாணய நிதியம் தேர்தலில் போட்டியிடுகிறதா? ரணில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுகிறார்.
தேசிய மக்கள் சக்தியின் வெற்றி குறித்து எதிர்க்கட்சிகள் குழப்பமடைந்து, மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பல்வேறு பொய்யான செய்திகளைப் பரப்ப ஆரம்பித்துள்ளன.
பொருளாதாரம் வீழ்ச்சி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசியக் கொடியை மாற்றும் என்று இப்போது சொல்கிறார்கள். நாங்கள் தேசியக் கொடியை மாற்ற மாட்டோம், ஆனால் ஊழல் மற்றும் மோசடி அரசியலை மட்டுமே மாற்றுவோம்.
எங்களின் வெற்றிக்கு பிறகு அமைதியின்மை மற்றும் வன்முறை ஏற்படும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன, அமைதியான தேர்தலை நாங்கள் விரும்புகிறோம். இந்தத் தேர்தல் எங்களுக்கு நிச்சயம் வெற்றி.” என்றார்.
மேலும், தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று சிலர் கூறுவதாகவும், ஆனால் ஏற்கனவே பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, கடந்த 76 ஆண்டுகளாக தோல்வியடைந்த கொள்கைகளால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேசிய மக்கள் சக்தி நாட்டைக் கைப்பற்றும் என்றார்.