Courtesy: Sivaa Mayuri
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றவுடன், பரந்த இலங்கை அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியும் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சமரசிங்க, வடக்கு மற்றும் கிழக்கின் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்கள் மற்றும் பெருந்தோட்டத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இந்த இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தமது கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை
“நாங்கள் இலங்கை அரசாங்கத்தை உருவாக்க விரும்புகிறோம். சிங்கள அரசாங்கத்தை அல்ல” என்று சமரசிங்க கூறினார்.
இதன்படி வரலாற்றில் முதல் தடவையாக, அரசாங்கத்தில் அங்கம் பெறாத நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சரவையில் நியமிக்கப்படுவர் என்று வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உள்ள 222 உறுப்பினர்களில் வடக்கு, கிழக்கு மற்றும் தோட்டத் துறைகளைச் சேர்ந்த நல்ல நாடாமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகவும், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் சமரசிங்க தெரிவித்தார்.
25 உறுப்பினர்கள்
ஆரம்பத்தில் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார உட்பட நான்கு பேர் இருப்பார்கள்.
விவாதங்களுக்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அமைச்சரவை ஏழு அல்லது எட்டு உறுப்பினர்களாக விரிவாக்கப்படலாம்.
ஒரே நேரத்தில் சரியாக 25 உறுப்பினர்களை நியமிக்க கடுமையான தேவைகள் எதுவும் இல்லை என்றும் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.