ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார
திஸாநாயக்கவின் ‘திசைகாட்டி’ சின்னத்துக்கு வாக்களிப்போம் என்று சமூகச்
செயற்பாட்டாளர் சுகு சிறிதரன் அறைகூவல் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஊழல் தொடர்பான தெளிவான பார்வை
“இலங்கையில் வறுமை, வேலையின்மை, எங்கும் ஊழல் எதிலும் ஊழல் தொடர்பான தெளிவான
பார்வை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினரிடம் உண்டு.
சாதாரண மக்களின் கல்வி, சுகாதாரம், உணவு, வீடு, நிலம் தொடர்பான கரிசனைகள்
அவர்களுக்கு இருக்கின்றன.
சமூகங்களுடைய சமத்துவம், இலங்கையின் வாழ்வு ஒரு சில
பணம் படைத்தவர்களுக்கு என்றும், பெருவாரியான மக்களின் வாழ்வு பாழ் பட்டு வறுமை
மிஞ்சி போனது என்ற நிலையையும் மாற்ற வேண்டுமென்ற தார்மீக ஆவேசமும் அவர்களிடம்
இருக்கின்றது.
மதவாதம், இனவாதம், தீண்டாமை இவற்றுக்கு எதிரான மானசிகமான எண்ணம் அவர்களிடம்
இருக்கின்றது. தேசிய இனப் பிரச்சினைகளுக்கு, தேசிய இனங்களின்
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும்
செயற்படக்கூடிய இலங்கையின் அனைத்து சமூக அறிவு ஜீவிகள் அவர்களுடன்
இருக்கின்றார்கள்.
13 ஆவது மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரங்களை முழுமையாக பகிர்வதற்கான அக்கறை
உள்ளவர்கள் அவர்களிடம் இருக்கின்றார்கள்.
குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் குடியேற்ற திட்டங்களை அனுமதிக்கப் போவதில்லை
என்று தேசிய மக்கள் சக்தியினரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் நிர்வாக இயந்திரத்துக்கு முன்னுரிமை
சிவில் நிர்வாக இயந்திரத்துக்கு முன்னுரிமை தேர்தல் விஞ்ஞாபனத்தில்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முதிர்ச்சியான இராஜதந்திர உறவுகள் பற்றி அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
குறித்துரைக்கின்றது.
76 வருடங்களாக மாறி மாறி ஆட்சி செய்தவர்களில் சந்திரிகாவின் ஆட்சி போன்று
விதிவிலக்கான காலங்கள் தவிர இந்த நாடு முழுதாக குட்டிச்சுவர்
ஆக்கப்பட்டுள்ளது., தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
இந்த 76 வருடங்களில் 40
தொடக்கம் 50 வருடங்கள் பேரழிவுகரமானவையாக இருந்தன. இந்த அழிவுகரமான இந்த
நாட்டின் தலைவிதியை மாற்ற வேண்டும்.
பல தவறுகள், சரிகளின் ஊடாக மக்கள் விடுதலை முன்னணியினர் இன்றைய நிலையை
வந்தடைந்திருக்கின்றார்கள்.
இன்று ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய முன்னணி
போட்டியாளர் தோழர் அநுரகுமார.
அவர் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர் அல்லர். அவர் வெளிப்படையானவர்.
புதிய தலைமுறையினர் அவருடன் இருக்கின்றார்கள்.
2022 எழுச்சியில் நாட்டை வங்குரோத்துக்குக் கொண்டு வந்த ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷவை நாட்டை விட்டு விரட்டிய அந்த எழுச்சியில் இந்தப் புதிய
தலைமுறையினரும் பங்குதாரர்கள்.
76 வருடங்களாக எம்மை ஏமாற்றிய – இந்த நாட்டு மக்களை ஏமாற்றிய பரம்பரைகள்
வாரிசுகளுக்கு மாற்றாக
எம்மைப் போல், எம் சகோதரர்கள் போல் போராடி மடிந்து, காணாமல்போன வரலாறு,
சித்திரவதைகள் கண்ட வரலாறு, பாலியல் வன்கொடுமைகள் கண்ட வரலாறு, உயிருடன்
எரிக்கப்பட்ட வரலாறு, தலைவர்கள் அவமானப்படுத்தப்பட்ட வரலாறு அநுரகுமாரவின்
மக்கள் விடுதலை முன்னணியினருக்கு – தேசிய மக்கள் சக்தியினருக்கு இருக்கின்றது.
அரச பயங்கரவாதம்
அரச பயங்கரவாதத்தையும் சமூக வலியையும் அவர்கள் நன்கு புரிந்து கொண்டவர்கள்.
45 வருட கால அபகீர்த்தியான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது, விசேட
அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது பற்றியும் அவர்கள்
கூறியிருக்கின்றார்கள்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தோழர் அநுரகுமார சமூகம், நேர்மை, அர்ப்பணம்,
தன்னல மறுப்பு கொண்ட இளம் தலைவர். இன்றைய நவீன இளம் தலைமுறையின் அபிமானம்
பெற்ற தலைவர் அவர்.
அவரின் சின்னம் திசைகாட்டிக்கு வாக்களிப்பது இலங்கையின் விடிவுக்கு இன
சமூகங்களின் விடிவுக்கான முதல் அடிவைப்பாக அமையலாம்.
இந்த நாட்டில் இன, மத, நல்லுறவு – ஜனநாயக சமூக பொருளாதாரக் கட்டுமானத்தை
உருவாக்குவதற்கான உறுதியான அத்திவாரமாக அமையும். தோழர் அநுரவுக்கு – அவரின்
தேசிய மக்கள் சக்தி திசைகாட்டிக்கு வாக்களிப்போம்!” – என்றுள்ளது.