ஜனாதிபதி தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்காக விசேட சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் விசேட தொடருந்துகளை இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று 19 முதல் 21 ஆம் திகதி வரை இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொடருந்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபொலகே தெரிவித்துள்ளார்.
விசேட சேவை
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் அன்று(21.09.2024) தொடருந்து நேர அட்டவணை வழமை போன்று நடைமுறைப்படுத்தப்படும் என தொடருந்து பிரதி பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள், 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீண்ட தூர தொடருந்துகள் சேவையில் ஈடுபடும் எனவும், குறுகிய தூர தொடருந்துகளில் சில குறைப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நிலையில், செப்டெம்பர் 21ஆம் திகதிவரை அமைதியான காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.